'10ம் தேதி தியேட்டர்கள் திறப்பு என தகவல்'... 'என்னென்ன நிபந்தனைகள்?'... இந்த படங்கள் தான் முதலில் ஓடும்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வரும் 10ஆம் தேதி முதல் திரையரங்குகளைத் திறக்க உரிமையாளர்கள் முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதையடுத்து திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டது. தற்போது பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், மக்கள் நெருக்கம் அதிகமாகக் காணப்படும் திரையரங்குகளை எப்படித் திறப்பது என்பது தொடர்பான பரிசீலனை நீண்ட நாட்களாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் அரசு விதித்துள்ள பல்வேறு நிபந்தனைகளின் அடிப்படையில் வரும் 10ஆம் தேதி முதல் திரையரங்குகள் திறக்கப்பட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
50 சதவீத இருக்கைகளில் மட்டுமே பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும் என்பது முக்கிய நிபந்தனையாக உள்ளது. இதன் அடிப்படையில் ஒரு இருக்கைவிட்டு அமரும் வகையில் திரையரங்குகளில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதேநேரத்தில் டிஜிட்டல் முறையில் திரையிடுவதற்கான வி.பி.எஃப் கட்டணத்தை யார் செலுத்துவது என்பதில் சிக்கல் நீடித்து வருவதால், தயாரிப்பாளர்கள் புதிய திரைப்படங்களைத் திரையரங்குகளில் வெளியிடப்போவதில்லை என முடிவெடுத்துள்ளனர்.
இந்நிலையில், வரும் 10 ஆம் தேதி திரையரங்குகளைத் திறந்து வேறு மொழி திரைப்படங்கள் மற்றும் ஏற்கெனவே திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய திரைப்படங்களைத் திரையிடத் திரையரங்கு உரிமையாளர்கள் முடிவெடுத்துள்ளனர்.