'தமிழகத்தில் கொரோனா தடுப்பு மருந்து'...!!! 'முதல்கட்ட பரிசோதனை குறித்து'...!!! அமைச்சர் விஜயபாஸ்கர் சொன்ன தகவல்...!!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா தடுப்பு மருந்தின் முதற்கட்ட பரிசோதனை வெற்றி அடைந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய அதிநவீன உடற்பயிற்சிக் கூடத்தை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், கொரோனா தடுப்பு மருந்தின் முதற்கட்ட பரிசோதனை வெற்றியடைந்துள்ளதாகவும், இரண்டாம் கட்ட பரிசோதனை 6 மாதம் கழித்து செய்யப்படும் என்று கூறினார்.
கொரோனாவை எவ்வாறு தடுத்துள்ளோம் என்பது குறித்து ப்ரிக்ஸ் நாடுகளுடன் நடந்த காணொலி வாயிலான கூட்டத்தில் விளக்கி கூறியதாகவும், இது நமக்கு பெருமை எனவும் அவர் கூறினார். கொரோனோ தொற்று ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவுவதை தமிழகத்தில் பெரிதும் தடுத்துள்ளோம் என தெரிவித்த அவர் இதுவே எங்களின் வெற்றி எனவும் தெரிவித்தார்.
முககவசம் அணியாத 10 லட்சம் நபர்களுக்கு இதுவரை அபராதம் விதித்துள்ளோம் என கூறிய அமைச்சர், பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிவது உள்ளிட்ட நோய் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றவேண்டும் என வலியுறுத்தினார். மழை காலங்களில் ஏற்படும் மலேரியா உள்ளிட்ட நோய்கள் கடந்த ஆண்டுகளை விட இந்தாண்டு 15 % குறைந்துள்ளது எனவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.