'பயணம்' செய்பவர்கள் கவனத்திற்கு... இனி 'இதெல்லாம்' கட்டாயம்... 'தமிழக' அரசின் 'புதிய' பரிசோதனை, தனிமைப்படுத்துதல் வழிமுறைகள்...
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்துதல் குறித்த புதிய வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு கொரோனா பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்துதல் குறித்த புதிய வழிமுறைகளை இன்று வெளியிட்டுள்ளது. அதில், தமிழகத்தில் ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கு செல்பவர்களுக்கு அறிகுறி இருந்தால் மட்டுமே பரிசோதனை செய்யப்படும் எனவும், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்கள் அனைவருமே 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்கள் அனைவருக்குமே கொரோனா பரிசோதனை செய்யப்படும் எனவும், அதில் பாதிப்பு உறுதி செய்யப்பட்டால் மருத்துவமனை, இல்லையென்றால் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள், 7 நாட்களுக்கு பின்னர் பரிசோதனையில் கொரோனா இல்லை எனத் தெரிய வந்தால் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு தனிமைப்படுத்தப்படுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.
அதேபோல வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருபவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படும் எனவும், பரிசோதனையில் பாதிப்பு உறுதி செய்யப்பட்டால் மருத்துவமனை, இல்லையென்றால் 7 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகள், விடுதிகள், ஹோட்டல்கள் உள்ளிட்டவற்றில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் தனிமைப்படுத்தப்படுவார்கள், 7 நாட்களுக்கு பின்னர் செய்யப்படும் அடுத்த பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இல்லையென்றால் அவரவர் வீடுகளில் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அதில் வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களில் உடனடியாக மருத்துவமனைக்கு செல்பவர்கள், கர்ப்பிணிகள், குடும்ப உறுப்பினர்களின் மறைவுக்கு வருபவர்கள், 75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தனிமைப்படுத்தப்படுவதிலிருந்து விலக்கு அளிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
