‘வௌவால் மேல பழியை போட்டு சீனா எஸ்கேப் ஆக பாக்குது’!.. பிரிட்டன் மற்றும் நார்வே விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் ‘புதிய’ தகவல்..!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸ் இயற்கையாக உருவானது அல்ல என பிரிட்டன் மற்றும் நார்வே விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவின் வுகான் மாகாணத்தில் கடந்த 2019-ம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொரோனா வைரஸால் இதுவரை 17 கோடி பாதிக்கப்பட்டுள்ளனர், அதில் 35 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் உலகம் முழுவதும் கொரோனா பரவலை தடுக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேபோல் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு அதை மக்களுக்கு செலுத்தும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனிடையே கொரோனா வைரஸ் எங்கு உருவானது என கண்டறிவதில் விஞ்ஞானிகள் தீவிர முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் குறித்து பிரிட்டன் பேராசிரியர் அங்கஸ் டால்லீஷ் (Angus Dalgleish) மற்றும் நார்வே விஞ்ஞானி டாக்டர் பிர்கர் சோரன்சென் (Dr. Birger Sorensen) தலைமையில் ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வின் முடிவுகள் Daily Mail பத்திரிகையில் வெளியிட்டுள்ளது. அதில், கொரோனா வைரஸ் இயற்கையாக உருவானதல்ல என்றும், அது வூகான் ஆய்வு மையத்திலேயே உருவாக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் ஆய்வு மையத்தில் இருந்து வைரஸ் வெளியானதை மறைக்க, வவ்வாலில் இருந்து அது உருவானதாக கூறி சீனா தப்பிக்க முயற்சிப்பதாக விஞ்ஞானிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.