'இப்போ தான் ஆம்புலன்ஸ் சத்தம் கொஞ்சம் குறைஞ்சிருக்கு'... 'சென்னைக்கு இது தித்திப்பான செய்தி'.. ஆனா இந்த எண்ணிக்கை மட்டும் குறையல!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மக்கள் நடமாட்டம் குறைந்திருப்பதே கொரோனா தொற்றின் எண்ணிக்கை குறையக் காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாகப் பரவிய நிலையில் கடந்த 12-ந்தேதி தமிழகம் முழுவதும் 30 ஆயிரத்து 855 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அதில் சென்னையில் மட்டும் 7,564 பேர் பாதிக்கப்பட்டார்கள். இதுவே சென்னையில் பதிவான தினசரி அதிகபட்ச பாதிப்பாகும். இதன் பிறகு கொரோனா தாக்கம் குறையத் தொடங்கினாலும் வேகமாக வைரஸ் தொற்று சரியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாகத் தான் குறைந்து வந்தது.
இதன்படி படிப்படியாகக் குறையத் தொடங்கிய கொரோனா பாதிப்பு அடுத்த ஒரு வாரத்தில் 6 ஆயிரமாகக் குறைந்தது. கடந்த 18-ந்தேதி 6,016 பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தனர். ஆனால் அதற்கு மறுநாள் இந்த எண்ணிக்கை சற்று கூடியது. 19-ந்தேதி அன்று 6,297 பேருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டது. அதன் பிறகு நோயின் தாக்கம் கணிசமாகக் குறைந்தது.
20-ந்தேதி அன்று சென்னையில் தினசரி பாதிப்பு 6,072 ஆக இருந்தது. இது அதற்கு மறுநாள் மேலும் குறைந்து தினசரி பாதிப்பு 5,913 ஆகப் பதிவாகி இருந்தது. இந்த சூழ்நிலையில் கடந்த ஒரு வாரக் காலமாகச் சென்னையில் தினசரி நோய்த் தொற்று தலைகீழாகச் சரிந்துள்ளது. கடந்த 22-ந்தேதியில் இருந்து தினமும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை யாரும் எதிர்பார்க்காத வகையில் குறைந்து வருகிறது.
நேற்று சென்னையில் தினசரி பாதிப்பு 3 ஆயிரத்துக்கும் கீழ் பதிவாகி இருக்கிறது. தமிழகம் முழுவதும் 33,361 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கோவையில் அதிகபட்ச பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 77 நாட்களுக்குப் பிறகு நேற்று சென்னையில் 3 ஆயிரத்துக்கும் குறைவான பாதிப்பு ஏற்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாகச் சென்னையில் பொதுமக்கள் நடமாட்டத்தைக் குறைக்க காவல்துறை எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகள் முக்கிய காரணம் ஆகும்.
அந்த வகையில் மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளது. இதன் காரணமாகவே கொரோனா தொற்று சென்னையில் குறைந்துள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். அதே நேரத்தில் சென்னையில் நோய்த் தொற்று குறைந்த போதிலும் உயிரிழப்பு கட்டுக்குள் வராமல் உள்ளது. நேற்று மாநிலம் முழுவதும் 474 பேர் பலியாகி இருக்கும் நிலையில் சென்னையில் 79 பேர் உயிரிழந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.