'ஏன் எங்களையே டார்கெட் பண்றீங்க'... 'விசாவுக்கு வந்த அதிரடி தடை'... 'எப்படி திரும்ப வேலைக்கு போவது'?... குழப்பத்தில் இந்தியர்கள்!
முகப்பு > செய்திகள் > உலகம்விசாவுக்கு தடை விதித்தது இந்தியர்களைக் குறிவைத்துச் செய்யப்படவில்லை என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக வெளிநாடுகளில் பணிபுரிவோர் மற்றும் வெளிநாடுகளில் படிக்கும் மாணவர்கள் எனப் பலர் இந்தியாவுக்குத் திரும்பினார்கள். தற்போது கொரோனா பரவல் சற்று தணிய ஆரம்பித்துள்ள நிலையில், மீண்டும் வேலைக்காகவும், படிப்பிற்காகவும் அந்தந்த நாடுகளுக்குத் திரும்பிச் செல்ல ஆரம்பித்துள்ளார்கள்.
அந்த வகையில் சீனாவிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பிய ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள், தொழிலதிபர்கள், தொழிலாளர்கள் ஆகியோர் மீண்டும் சீனாவுக்குத் திரும்ப இருந்த நிலையில் அதற்கு தற்போது முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. சீனாவுக்குத் திரும்ப நினைப்பவர்களுக்கு அந்நாட்டு அரசு விசா வழங்க மறுப்பதே அதற்கு முக்கிய காரணம் ஆகும்.
இதுதொடர்பாக சீனாவுக்கான இந்தியத் தூதர் விக்ரம் மிஸ்ரி கண்டனம் தெரிவித்தார். இந்நிலையில், இந்தியத் தூதரின் கண்டனம் குறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் ஹுவா சுன்யிங் பேசுகையில், ''உலகம் முழுவதும் இன்னும் கொரோனா பரவி வருகிறது. எனவே சட்டத்தின் அடிப்படையில், விஞ்ஞான ரீதியாக கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைச் சீனா கடைப்பிடித்து வருகிறது.
கொரோனாவை கட்டுப்படுத்த இந்தக் கட்டுப்பாடுகள் சரியானதுதான். விசா வழங்கத் தடை விதித்தது, இந்தியர்களைக் குறிவைத்துச் செய்தது அல்ல. நாடு திரும்ப விரும்பும் சீன குடிமகன்களுக்கும் இது பொருந்தும். இந்தக் கட்டுப்பாடுகளை இப்போதைக்குத் தளர்த்த வாய்ப்பில்லை'' எனத் தெரிவித்துள்ளார்.