'பதற்றத்தில் ஆப்கான் மக்கள்'... 'யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்டை போட்ட சீனாவின் அறிவிப்பு'... இந்தியாவுக்கு தலைவலியா?
முகப்பு > செய்திகள் > உலகம்20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றி உள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் எந்த தீவிரவாத அமைப்பிற்கும் புகலிடம் கொடுக்க மாட்டோம் என தாலிபான்கள் அமெரிக்காவிடம் உறுதி அளித்த நிலையில், அங்கிருக்கும் தங்களது படைகளைத் திரும்ப அழைத்துக் கொள்ள அமெரிக்கா முடிவு செய்தது. இதன்படி 90 சதவீத அமெரிக்கப் படைகள் தாயகம் திரும்பிவிட்ட நிலையில், சிறிய அளவிலான வீரர்கள் மட்டுமே ஆப்கானிஸ்தானில் உள்ளனர்.
அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், அங்கு தலீபான்களுக்கும் அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வந்தது. இதில் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளைத் தலீபான்கள் கைப்பற்றிய நிலையில், நேற்று தலைநகரம் காபூலுக்குள் நுழைந்த தாலிபான்கள் முக்கிய கட்டிடங்கள் அனைத்தையும் சில மணி நேரத்துக்குள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
அதிபர் மாளிகையும் அவர்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அதிபர் அஷ்ரப் கனி மாளிகையில் இல்லை. அவர் தஜிகிஸ்தான் நாட்டுக்குத் தப்பிச் சென்றுவிட்டார். இதனால் நாட்டின் முழு கட்டுப்பாடும் இப்போது தாலிபான்கள் கையில் வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஆப்கானில் நடந்த ஆயுதப் போரில் தலீபான்கள் வென்றுள்ளதாக ஆப்கான் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக ஆப்கானிஸ்தானில் அசாதாரண சூழ்நிலை நிலவும் நிலையில், தூதரகங்களை மூடிவிட்டு வெளியேற அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆயத்தமாகி வருகின்றன. இந்த சூழ்நிலையில் தலீபான்களுடன் நட்பு ரீதியிலான உறவுகளை மேம்படுத்தத் தயாராக இருப்பதாகச் சீனா அதிரடியாக அறிவித்துள்ளது. ஏற்கனவே தலீபான்களை அங்கீகரிப்பதாகப் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அறிவித்தது சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சூழ்நிலையில் சீனாவின் அறிவிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்தியாவின் அண்டை நாடுகளான சீனா மற்றும் பாகிஸ்தான் தாலிபான்களுக்கு ஆதரவு தெரிவித்திருப்பது நிச்சயம் இந்தியாவுக்கு புதிய தலைவலியைக் கொடுக்கும் எனச் சர்வதேச அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

மற்ற செய்திகள்
