எல்லாரும் கட்டுக்கதைன்னு நினைச்சாங்க.. 650 வருஷத்துக்கு முன்னாடி கடலுக்குள் மூழ்கிப்போன பிரம்மாண்ட நகரம்.. தானாகவே மேலே வந்த அதிசயம்?..!
முகப்பு > செய்திகள் > உலகம்இங்கிலாந்தில் 650 வருடங்களுக்கு முன்னர் கடலில் மூழ்கிப்போன நகரத்தை ஆராய்ச்சியாளர்கள் தற்போது கண்டுபிடித்துள்ளனர்.
பண்டைய காலங்களில் கடற்கரை மற்றும் நதிகளின் ஓரங்களில் ஏராளமான நகரங்கள் அமைந்திருந்தன. கடல் மற்றும் நதிகளில் ஏற்பட்ட சீற்றம் காரணமாக இவற்றுள் பல நகரங்கள் அழிந்து போயின. அவ்வாறு கடலுக்குள் மூழ்கிப்போன நகரங்கள் குறித்த ஆராய்ச்சிகள் உலகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இங்கிலாந்தின் பழமையான நகரம் இன்னும் கடலில் முழ்கியிருப்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஆரம்பத்தில் இந்த நகரம் பற்றிய கருத்துக்களை கட்டுக் கதைகள் என நினைத்த மக்கள் தற்போது வியப்பில் வாயடைத்துப்போயுள்ளனர்.
கடலுக்குள் மூழ்கிய நகரம்
பண்டைய இங்கிலாந்தின் புகழ்பெற்ற நகரங்களில் ஒன்று ராவென்சர் ஆட் (Ravenser Odd). கோட்டை, துறைமுகம் என செழுமையாக இருந்த இந்நகரம் பற்றி புகழ்பெற்ற எழுத்தாளர் ஷேக்ஸ்பியர் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார். இந்த நகரம் கடலில் ஏற்பட்ட சீற்றத்தின் காரணமாக 1362 ஆம் ஆண்டு மூழ்கிப்போனது. இந்நகரம், மீன்பிடி படகுகள் மற்றும் சரக்கு கப்பல்களின் ஓய்விடமாகவும் இருந்திருக்கிறது.
இந்நிலையில் யார்க்ஷைரின் அட்லாண்டிஸ் என அழைக்கப்படும் இந்த நகரம் கடலுக்கடியே சுமார் ஒருமைல் ஆழத்தில் இருப்பதாக ஆய்வாளர்கள் கணித்திருந்தனர். ஆனால், தற்போது கடல்நீருக்கு சில மீட்டர் ஆழத்தில் இந்த நகரத்தை சேர்ந்த பாறைகள் தென்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஆராய்ச்சி
கடலுக்கடியே மூழ்கிப்போனதாக நம்பப்பட்ட நகரத்தின் தற்போதைய நிலைமை குறைத்து ஆய்வில் இறங்கிய போதுதான், கடல் நீரின் கீழ் சில மீட்டர் தூரத்தில் பாறைகள் மற்றும் கற்கள் இருப்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருக்கின்றனர். இதனையடுத்து இங்கே அமைந்திருந்ததாக சொல்லப்படும் துறைமுகத்தின் கோட்டை சுவர்களை கண்டுபிடிக்கும் பணியில் தற்போது இறங்கியுள்ளனர் ஆய்வாளர்கள்.இதற்காக சோனார் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹல் பல்கலைக்கழகத்தின் புவியியலாளர் பேராசிரியர் டான் பார்சன்ஸ் இந்த ஆராய்ச்சியை வழிநடத்துகிறார். இதுகுறித்து அவர் பேசுகையில்,"இது எங்களை கவர்ந்துவிட்டது. உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த இடைக்கால நகரத்தின் சரியான இடம் இதுவரை கண்டறியப்படவில்லை" என்றார்.
அர்ப்பணிப்பு
நகரத்தின் அடித்தளம், துறைமுகம் மற்றும் கடல் எல்லை சுவர் உள்ளிட்டவற்றின் தடயங்களை கண்டறியும் பணியில் இறங்கியுள்ளதாக கூறும், ஆராய்ச்சியாளர்கள் மொத்த ஐரோப்பாவின் வரலாற்றில் இந்த கண்டுபிடிப்பு மைல்கல் சாதனையாக இருக்கும் என்கிறார்கள். இந்த நகரம் குறித்த ஆய்வில் 25 வருடங்களாக ஈடுபட்டுவரும் பில் மாத்திசன் இதுபற்றி பேசுகையில்,"நீண்ட காலத்திற்குப் பிறகு அதைக் கண்டுபிடிப்பது என் வாழ்வின் நிறைவாக இருக்கும். அந்த பாறைகளை பார்த்த உடனேயே வியப்பின் உச்சிக்கே சென்றுவிட்டேன்" என்கிறார்.
இந்த நகரம் குறித்த ஆராய்ச்சி பல நீண்ட நாள் கேள்விகளுக்கு பதிலளிக்கும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இதனிடையே கடலுக்கடியே 650 ஆண்டுகளுக்கு முன்னர் மூழ்கிப்போன நகரம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருப்பது இங்கிலாந்து முழுவதும் வைரலாக பேசப்பட்டு வருகிறது.