உருமாற்றம் அடைந்த கொரோனா!.. பிரிட்டனில் இருந்து வந்தவர்கள் சிலர் மொபைல் ஃபோன் SWITCH OFF!!.. 151 பேரை தேடும் பணி தீவிரம்!.. பகீர் பின்னணி!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇங்கிலாந்தில் இருந்து பெங்களூருவுக்கு வந்த 151 பேரை சுகாதாரத்துறையினர் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
சீனாவின் உகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலகத்தையே ஆட்டி படைத்து வருகிறது. அந்த வைரசின் தாக்கம் தற்போது சற்று குறைய தொடங்கி உள்ளது. மேலும் கொரோனாவுக்கு மருந்தும் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து புதிய வகை வைரசாக பரவி வருகிறது. இந்த உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் 70 சதவீதம் வேகமாக பரவி வருகிறது.
இதனால் அந்த வைரஸ் தங்கள் நாட்டுக்குள் வராமல் தடுக்க இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதனால் இங்கிலாத்துக்கான விமான சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் கடந்த நவம்பர் 25-ந்தேதிக்கு பிறகு இங்கிலாந்தில் இருந்து இந்தியா திரும்பியவர்களை கண்டறிந்து அவர்களுக்கு சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
கர்நாடகத்தில் கடந்த நவம்பர் மாதம் 25-ந்தேதியில் இருந்து கடந்த 22-ந்தேதி வரை இங்கிலாந்தில் இருந்து 2,500 பேர் வந்துள்ளனர். அவர்களில் 1,638 பேரை சுகாதாரத்துறையினர் கண்டறிந்து கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.
அதில் 14 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவர்களுக்கு உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா பாதிக்கப்பட்டுள்ளதா? என்பது தெரியவில்லை. அந்த 14 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவில் தான் அது என்ன வைரஸ் என தெரியவரும்.
இந்த நிலையில், இங்கிலாந்தில் இருந்து பெங்களூருவுக்கு வந்த 151 பேர் எங்கு சென்றனர் என்பது தெரியவில்லை. அவர்களில் பெரும்பாலோனார் தங்களின் செல்போனை 'சுவிட்ச்-ஆப்' செய்யப்பட்டுள்ளதாக தகவல் வருகிறது. மேலும் சிலர் சுற்றுலா சென்றிருப்பதாக தெரிகிறது.
இதனால் அவர்களை கண்டறிய முடியாமல் சுகாதாரத்துறையினர் திணறி வருகிறார்கள். இந்த நிலையில் இங்கிலாந்தில் இருந்து பெங்களூருவுக்கு வந்த 151 பேரை தேடும் பணியில் சுகாதாரத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.