10 வருஷத்துக்கு முன்னாடி பார்வை போன அதே நாள்ல கின்னஸ் ரெக்கார்டு.. 339 கிமீ வேகத்தில் காரை ஒட்டி அசத்திய மாற்றுத் திறனாளி..!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவை சேர்ந்த கண்பார்வையற்ற மாற்றுத் திறனாளி ஒருவர் அதிவேகமாக காரை ஒட்டி கின்னஸ் சாதனையை முறியடித்திருக்கிறார்.

அமெரிக்காவை சேர்ந்த டான் பார்க்கர் என்பவர் 10 ஆண்டுகளுக்கு முன்பாக மார்ச் 31 ஆம் தேதி நேர்ந்த ஒரு விபத்தில் தனது கண் பார்வையை இழந்துள்ளார். ஆனாலும், மனம் தளராத அவர் லூசியானா மாகாணத்தில் உள்ள பார்வையற்றோருக்கான மையத்தில் சேர்ந்து தனது திறமைகளை வளர்த்திருக்கிறார். பார்வையை இழந்தாலும் சாதிக்க வேண்டும் என்று உறுதியுடன் இருந்த பார்க்கர் 7 ஆண்டுகளுக்கு முன்னர் மார்ச் 31 ஆம் தேதி அந்த மையத்தில் பட்டம் பெற்றிருக்கிறார்.
கின்னஸ் சாதனை
இந்நிலையில் பார்க்கர், அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோவில் உள்ள ஸ்பேஸ்போர்ட் ஓடுபாதையில் தனது பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட காரை மணிக்கு 339.64 கிமீ வேகத்தில் ஓட்டி கின்னஸ் சாதனை புரிந்துள்ளார். முன்னதாக மணிக்கு 322.68 கிலோமீட்டர் வேகத்தில் ஓட்டப்பட்டதே கின்னஸ் சாதனையாக இருந்துவந்தது. இந்நிலையில் இந்த சாதனையை தற்போது முறியடித்திருக்கிறார் பார்க்கர்.
மார்ச் 31 ஆம் தேதி
டான் பார்க்கர் 10 ஆண்டுகளுக்கு முன்பாக தனது கண்பார்வையை இழந்த அதே மார்ச் 31 ஆம் தேதி இந்த கின்னஸ் சாதனையை படைத்துள்ளார். பார்வையற்றவர்களின் தேசிய கூட்டமைப்பு மூலமாக ‘பார்வையற்ற ஓட்டுநர்களுக்கான சவால்’ (Blind Driver Challenge) எனும் போட்டியின் ஒரு பகுதியாக இந்த சாதனை முயற்சி நடத்தப்பட்டது.
இதில் ஆடியோ வழிகாட்டுதலின் மூலமாக பார்க்கர் அதிவேகத்தில் காரை இயக்கியிருக்கிறார். இதுகுறித்து அவர் பேசுகையில்,"ஒரு பார்வையற்ற நபர் காரை இயக்க முடியும் அதுவும் 200 மைல் வேகத்தில் எங்களால் காரை ஓட்ட முடியும் என நிரூபித்துள்ளோம். இந்த வெற்றி பார்வையற்றவர்களுக்கு ஊக்கமளிக்கும் என்று நம்புகிறோம். தொழில்நுட்ங்களின் வளர்ச்சி காரணமாக இன்று வெளிவரும் தானியங்கி வாகனங்கள் பார்வையற்றோரின் அன்றாட சிக்கல்களை தீர்க்க உதவும் என எதிர்பார்க்கிறேன்" என்றார்.
பார்வையற்ற ஓட்டுநர்களுக்கான சவால் போட்டியானது 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. பார்வையை இழந்த அதே நாளில் பார்க்கர் அதிவேகத்தில் காரை ஒட்டி சாதனை படைத்திருப்பது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

மற்ற செய்திகள்
