'ரோபோவுக்கு' கூட உயிர் கொடுக்க முடியுமா? இதோ 'விஞ்ஞானிகள்' சாதித்து விட்டனர்... 'ஸ்டெம் செல்' தொழில்நுட்பத்தில் ஒரு புரட்சி...
முகப்பு > செய்திகள் > உலகம்தவளைகளின் ஸ்டெம் செல்களைப் பயன்படுத்தி, உலகின் முதல் உயிருள்ள ரோபோக்களை அமெரிக்காவின் வெர்மான்ட் பல்கலைக்கழகம் (Vermont) மற்றும் டஃப்ட்ஸ் பல்கலைக்கழகத்தைச் (Tufts) சேர்ந்த விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஜெனோபஸ் லேவிஸ் (Xenopus laevis) என்ற தவளையினத்தின் ஸ்டெம் செல்களைக் கொண்டு உருவாக்கியதால், இவற்றுக்கு 'ஜெனோபாட்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த இயந்திரங்கள், ஒரு மில்லிமீட்டருக்கும் குறைவாக அதாவது 0.04 அங்குலங்கள் அகலம் கொண்டவை. மிக நுண்ணிய இந்த ரோபோக்கள் மனித உடலுக்குள் செலுத்த போதுமானவை. எதிர்காலத்தில் ஸ்டெம் செல்கள் மூலம் தீர்க்க முடியாத நோய்களைக் குணப்படுத்த இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது.
இந்த சிறிய ரோபோக்களால் நடக்கவும் நீந்தவும் முடியும். பல வாரங்கள் உணவு இல்லாமல் உயிர்வாழ முடியும். இந்த ஜெனோபாட்டுகளுக்கு சுயமாகத் தன்னை குணப்படுத்திக் கொள்ளும் திறன் உண்டு. விஞ்ஞானிகள் ஒரு ரோபோவை வெட்டியபோது, அது தானாகவே குணமடைந்து நகர்ந்தது. இந்த 'உயிரியல் இயந்திரம்' வழக்கமான ரோபோக்களால் செய்ய முடியாத விஷயங்களை சுயமாக செய்யும் திறன் பெற்றது. இவை மனித ஆரோக்கியத்திற்குப் பாதுகாப்பானவை என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஜெனோபாட்கள் கதிரியக்கக் கழிவுகளைச் சுத்தம் செய்வதற்கும், பெருங்கடல்களில் மைக்ரோபிளாஸ்டிக் சேகரிப்பதற்கும், மனித உடல்களுக்குள் மருந்துகளை எடுத்துச் செல்வதற்கும் பயன்படுத்தப்படலாம். ஊட்டச்சத்துகள் இல்லாமலே, பல வாரங்களுக்கு ஜெனோபாட்டுகள் நீர்ச் சூழலில் வாழ முடியும். இதனால் அவை உடலின் உள்ளே மருந்தை எடுத்துச் செல்ல ஏற்றவை. மேலும், மனித உடல் பற்றி அறிய ஆராய்ச்சியாளர்களுக்கு ஜெனோபாட்டுகள் உதவக்கூடும், மனித வாழ்வின் எதிர்கால முன்னேற்றத்திற்கான கதவுகளை இது திறக்கக்கூடும்.