"27 வருசமா யாரையும் நெருங்க விடல".. அமேசான் பழங்குடி இனத்தின் கடைசி மனுஷன்.. தற்போது வெளியான அதிர்ச்சி தகவல்!!
முகப்பு > செய்திகள் > உலகம்அமேசான் காட்டில் குறிப்பிட்ட ஒரு பழங்குடி இனத்தை சார்ந்த நபர் ஒருவர், கடந்த 26 ஆண்டுகளாக தனியாக வாழ்ந்து வந்த நிலையில், தற்போது அவரை பற்றி வெளி வந்துள்ள தகவல், கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உலக மக்கள் மற்றும் நகர பகுதிகளுக்கு தொடர்பே இல்லாமல், பல பழங்குடி இனத்தை சேர்ந்த மக்கள், தொடர்ந்து காட்டிற்குள்ளேயே வாழ்ந்து வருகின்றனர்.
அவர்களின் மொழி, கலாச்சாரம், உடை என அனைத்து விஷயங்களும் அந்த குறிப்பிட்ட பழங்குடி மக்களுக்கு மட்டுமே தெரிந்த ஒரு விஷயமாக இருக்கும்.
மேலும், புற உலகில் இருந்து செல்லும் மனிதர்கள் கூட, அங்குள்ளவர்களுக்கு வேற்றுகிரக வாசிகளாக தான் தெரிவார்கள். அப்படி இருக்கையில், பிரேசிலின் அமேசான் காட்டில் வாழ்ந்து வந்த ஒரு குறிப்பிட்ட பழங்குடி இனத்தின் கடைசி நபர் என கருதப்பட்டு வந்தவர், தற்போது உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஒரு பழங்குடியினரின் மொத்த மக்களும் தற்போது உயிருடன் இல்லை என்ற தகவல், தற்போது சமூக ஆர்வலர்கள் பலரது மத்தியில், கடும் விவாதத்தையும் சோகத்தையும் உண்டு பண்ணி உள்ளது. தற்போது இறந்து போன இந்த உறுப்பினர், Indio do Buraco அல்லது Indigenous man of the hole என அறியப்பட்டு வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
முன்னதாக, கடந்த 1970 களில், இந்த பழங்குடியினரின் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்வதற்காக தொடர்ந்து சிலர் தாக்குதலை மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதன் காரணமாக, அந்த இனத்தைச் சேர்ந்த அனைத்து மக்களும் படுகொலை செய்யப்பட்டதாகவும் மீதமிருந்த ஆறு பேர், 1995 ஆம் ஆண்டு அழிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதன் பின்னர், கடந்த 27 ஆண்டுகளாக தனியாக இருந்து வரும் நபர், தற்போது இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து, மனிதர்கள் தாக்குதல் நடத்தி வந்ததால், அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதற்கான எந்த முயற்சியையும் எடுக்காமல், யாரையும் நெருங்க விடாமல் தனியாகவே வாழ்ந்து வந்துள்ளார். மேலும், யாராவது நெருங்கும் பட்சத்தில், சில ஆயுதங்கள் கொண்டு தன்னை தற்காத்து இத்தனை ஆண்டுகள் அவர் வாழ்ந்து வந்துள்ளார்.
அப்படி ஒரு சூழ்நிலையில், தற்போது சிறிய குடிசை வீடு ஒன்றில், அவர் உயிரிழந்து கிடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. பிரேசிலின் தேசிய இந்திய அறக்கட்டளையான FUNAI, குறிப்பிட்ட பழங்குடி இனத்தின் கடைசி மனிதன் உயிரிழந்துள்ளதை உறுதி செய்துள்ளது. இயற்கை காரணங்களால் அவர் உயிரிழந்திருக்கலாம் என்றும், அவருக்கு சுமார் 60 வயது இருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
கடந்த 2018 ஆம் ஆண்டு, அரசாங்கம் நியமித்த குழு ஒன்று, இவரை எடுத்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.