ஊருக்கு வெளில ரொம்ப நேரமா தனியா நின்ன ட்ரக்.. சந்தேகப்பட்டு கதவை திறந்த போலீஸ்.. கொஞ்ச நேரத்துல உயர் அதிகாரிகளுக்கு பறந்த போன்கால்..!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் நகரத்திற்கு வெளியே தனித்து விடப்பட்ட ட்ரக்கில் 46 மனிதர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது அந்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அதிர்ச்சி
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் இருக்கிறது சான் அன்டோனியோ பகுதி. அமெரிக்க - மெக்சிகோ எல்லையில் இருந்து 250 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள இந்த பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் ட்ரக் ஒன்று நின்றிருக்கிறது. பல மணி நேரங்களாக டிரக் நகராமல் அங்கேயே இருப்பதை கண்ட காவல்துறையினர் அதனை ஆய்வு செய்திருக்கின்றனர். டிரைவர் இருக்கையில் யாரும் இல்லாததால் சந்தேகமடைந்த காவல்துறை அதிகாரிகள், ட்ரக்கின் கதவை திறந்திருக்கின்றனர்.
அந்த ட்ரக்கின் உள்ளே ஏராளமான மக்கள் உயிரிழந்த நிலையில் கிடந்தது காவல்துறை அதிகாரிகளை திடுக்கிட வைத்திருக்கிறது. இதனையடுத்து, உள்ளூர் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டு, உயிருக்கு போராடிய 16 பேரை மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பிவைத்தனர். பூட்டிய ட்ரக்கிற்குள் 46 மக்களின் உடல்கள் இருந்தது அமெரிக்கா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆட்கடத்தல்
மெக்சிகோவில் இருந்து சட்ட விரோதமாக மக்களை அமெரிக்காவிற்குள் கடத்திவருவதை பல கும்பல்கள் வாடிக்கையாக செய்துவருகின்றன. இந்நிலையில், இந்த ட்ரக்கினுள் இருந்தவர்களும் அப்படி கடத்தி வரப்பட்டவர்களாக இருக்கக்கூடும் என்கிறார்கள் காவல்துறை அதிகாரிகள். இதுபற்றி போலீசார் பேசுகையில்,"நாங்கள் ட்ரக்கின் கதவை திறப்பதை தவிர வேறு வழியில்லை என்பதை உணர்ந்திருந்தோம். ஆனால் இப்படி ஒரு துயரம் நடந்திருக்கும் என எதிர்பார்க்கவில்லை. ட்ரக்கினுள் உயிருக்கு போராடிய நிலையில் இருந்த 16 பேரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளோம்" என்றனர்.
கோடைக்காலம் என்பதால் மூடிய ட்ரக்கினுள் நிலவிய கடும் வெப்பம் மற்றும் உடலில் நீர் வற்றிப்போனதன் காரணமாக இந்த மக்கள் உயிரிழந்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இந்நிலையில் சான் அன்டோனியோ மேயர் ரான் நிரன்பெர்க் இதுகுறித்து பேசுகையில்,"அவர்களுக்கு குடும்பங்கள் இருந்திருக்கலாம். மேலும் ஒரு நல்ல வாழ்க்கையைக் கண்டுபிடிக்க அவர்கள் முயற்சி செய்திருக்கலாம். இது மக்களிடையே பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது" எனத் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், அதன் பின்னரே என்ன நடந்தது என்பது குறித்து தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் மூடிய ட்ரக்கினுள் 46 பேருடைய சடலம் கண்டுபிடிக்கப்பட்டது, அந்நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
Also Read | "இனி டீ வேண்டாம்.. இதை குடிங்க மக்களே"..பொருளாதார சிக்கலை தீர்க்க பாகிஸ்தான் அரசு எடுத்த புதுமையான முடிவு..!