'மூன்றே' மாதத்தில்... 1000 பெண்கள் 'கொலை'... அந்த 'நாட்டுல' என்ன தான் நடக்குது?
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸ் உலக நாடுகள் அனைத்தையும் கடுமையாக அச்சுறுத்தி வரும் நிலையில், பல உலக நாடுகள் ஊரடங்கை கடைபிடித்து வருகிறது.

வட அமெரிக்க நாடான மெக்சிகோவிலும் கொரோனா தொற்று மூலம் இதுவரை 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக மெக்சிகோ அரசு, ஊரடங்கை இம்மாதம் இறுதி வரை நீட்டித்துள்ளது. இந்நிலையில், மக்கள் அதிக நேரம் வீட்டிலேயே முடங்கிக் கிடப்பதால் குடும்ப வன்முறை முன்னை விட தற்போது அதிகமாகி உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் சண்டை, திருமணம் செய்யாமல் ஒன்றாக இணைந்து வாழ்வோர் என தினமும் சண்டையிட்டு அதிகம் பேர் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். இது போன்ற மோதல்களால் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 1,000 பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து மெக்சிகோ நாட்டிலுள்ள மகளிர் அமைப்புகள் தெரிவிக்கையில், 'பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஆண்டு தோறும் அதிகரித்து வந்த வண்ணம் உள்ளன. இதை தடுக்க அதிபர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்' என தெரிவித்துள்ளது.
இதனை முற்றிலும் மறுத்த மெக்சிகோ அதிபர் லோபஸ் ஒப்ரடார், 'இங்கு எப்போதும் போல பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடந்து கொண்டே தான் இருக்கிறது. ஊரடங்கு நேரத்தில் மட்டும் நடப்பதாக கூறுவது தவறு. மகளிர் அமைப்புகளை எதிர்க்கட்சிகள் தூண்டி விட்டுள்ளது' என தெரிவித்துள்ளார்.
