'லாக்டவுன்' தளர்த்தப்பட்டதும்... 'சீனர்களிடம்' அதிகரித்துள்ள 'ரிவென்ஜ்' ஸ்பென்டிங் பழக்கம்!... 'இந்தியர்களிடமும்' வருமா?...
முகப்பு > செய்திகள் > உலகம்சீனாவில் ஊரடங்கு தளர்த்தப்பட்டதை அடுத்து ரிவென்ஜ் ஸ்பென்டிங் என்னும் பழக்கம் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

சீனாவின் குவாங்சோ நகரிலுள்ள பிரெஞ்சு நிறுவனமான ஹெர்ம்ஸின் மிகப்பெரிய ஷோரூமில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு விற்பனை தொடங்கிய நாளிலேயே 2.7 மில்லியன் டாலருக்கு வியாபாரம் நடந்துள்ளது. சீனா முழுவதிலுமே ஒரே கடையில் ஒரே நாளில் இவ்வளவு அதிக வியாபாரம் நடந்தது இதுவே முதல்முறை எனக் கூறப்படுகிறது. மேலும் ஊரடங்கு காரணமாக சீன மக்கள் நீண்ட நாட்களாக வீட்டிலேயே அடைபட்டு கிடந்ததால் வெளியே வந்ததும் கட்டுப்பாடின்றி செலவு செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த பழக்கம் ரிவென்ஜ் ஸ்பென்டிங் (Revenge Spending) என அழைக்கப்படுகிறது.
நீண்ட நாட்களுக்குப் பிறகு ஷாப்பிங் செய்யும் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான கடைகளை தேடிச்சென்று அளவுக்கு அதிகமாக செலவு செய்து பொருட்களை வாங்கி குவிப்பதாகவும், சீன நகரங்களிலுள்ள ஆப்பிள், நைக், குக்கி, எஸ்டீ லவுடெர், லான்கோம் போன்ற பிரபல கடைகளில் நீளமான வரிசையில் வாடிக்கையாளர்கள் காத்திருந்து பொருட்களை வாங்கிச் செல்வதாகவும் கூறப்படுகிறது.
சீன மக்களின் இந்த புதிய பழக்கம் இந்தியர்களுக்கும் வருமா என்பது குறித்து பேசியுள்ள பெய்ன் & கம்பெனி நிறுவனத்தின் பங்குதாரர் நிகில் பிரசாத் ஓஜா, "இந்திய சந்தையில் மதிப்புக்கு மவுசு இருக்கும். ஒருபுறம், மக்கள் விலை குறைவான பொருட்களை தேடிச் செல்வார்கள். மறுபுறம், அதிக வருமானம் பெறுபவர்கள் அதிக செலவுகளை செய்து பொருட்களை வாங்கிக் குவிப்பார்கள்” எனத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள அல்வரெஸ் & மர்சால் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் நிதின் ஜெயின், "இந்திய வாடிக்கையாளர்களை சீன வாடிக்கையாளர்களுடன் ஒப்பிட முடியாது. இந்தியாவில் விற்பனை பாதிக்கப்படலாம்" எனத் தெரிவித்துள்ளார்.
