‘அந்த மாதிரி’ படம் பாக்குறவங்களுக்கு வேட்டு.. தப்பித்தவறி கூட இதை ‘கிளிக்’ பண்ணா சோலி முடிஞ்சுது.. அலெர்ட பண்ணிய ஆராய்ச்சியாளர்..!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்இணையத்தில் ஆபாச படம் பார்ப்பவர்களுக்கு இணைய பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் எச்சரிக்கை ஒன்றை செய்துள்ளார்.
தலைதூக்கும் பழைய ஆன்லைன் மோசடி
நாளுக்குநாள் இணைய பயன்பாடு அதிகரித்து வரும் நேரத்தில், ஆன்லைன் மோசடி சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் பழைய ஆன்லைனில் மோசடி முறை ஒன்று மீண்டும் தலைதூக்கியுள்ளது.
ஆபாச இணையதளம்
அதில், ஆபாச இணையதளங்களை பார்த்துக்கொண்டிருப்பவர்களின் திரையில் திடீரென போலியான பாப்-அப் (pop-up) ஒன்று தோன்றும். அப்போது ஆபாச படம் பார்த்துக்கொண்டிருப்பவர்களின் Browser லாக் ஆகிவிட்டதாக எச்சரிக்கை வரும். இதுபோல, Google Chrome browser-லும் தோன்றும். அந்த சந்தேகத்திற்குரிய URL மூலம் நடக்கும் மோசடி தொடர்பாக ஆதாரங்களைகளை வெளியிட்டு இணைய பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் ராஜசேகர் ராஜாரியா எச்சரிக்கை செய்துள்ளார்.
சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் பெயரில் மோசடி
இதுகுறித்து ராஜசேகர் ராஜாரியா தனது டுவிட்டர் பக்கத்தில் மோசடி குறித்த சில ஸ்கீர் ஷாட்களை பதிவிட்டுள்ளார். அதில், ‘ஆன்லைனில் ஆபாச படங்களை பார்க்கும்போது உங்களது Browser லாக் ஆகவிட்டதாக கூறி முழு திரையை மறைத்தது போல ஒரு pop-up தோன்றும். இதனைத் தொடர்ந்து அந்த pop-up, Browser-ல் லாக்கை எடுப்பதற்கு பயனர்களை கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறும். மேலும், அந்த pop-up பார்ப்பதற்கு சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் போன்றே தோற்றமளிக்கும் வகையில் இருக்கும். அதில், 173-279 ஆணையின் கீழ் பயனரின் கணினி முடக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படும். அதேபோல், இந்திய சட்டத்தால் தடைசெய்யப்பட்ட இணையதளத்தை பார்த்ததால், தங்களது Browser முடக்கப்பட்டுள்ளதாக பயனரை எச்சரிக்கை செய்யும்.
பயத்தை பணமாக்கும் கும்பல்
இதைப் பார்த்து படபடத்து போயிருக்கும் பயனர்கள் செய்வதறியாது, சிறிது நேரம் திகைத்து நிற்பார்கள். இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் அந்த மோசடி கும்பல், அந்த pop-up மூலம், முடக்கப்பட்ட Browser-ஐ ஆன்லாக் செய்வதற்கு குறிப்பிட்ட அபராதம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கும். இதைப் பார்த்து பயப்படாத பயனர்களை தங்களது வழிக்கு கொண்டு வர, அபராதம் செலுத்தத் தவறினால் அந்த கணினி பயன்படுத்துபவர்கள் குறித்த விவரங்கள் குற்றவியல் நடவடிக்கைகளுக்காக அமைச்சகத்திற்கு அனுப்பிவைக்கப்படும் என்று தெரிவிக்கும்.
கால அவகாசம்
இதனை அடுத்து இந்த கட்டணத்தை செலுத்துவதற்கு பயனர்களுக்கு 6 மணிநேரம் வரை அவகாசம் வழங்கப்படுவதாகவும் அந்த pop-up தெரிவிக்கும். அதில் கட்டணம் செலுத்துவதற்கான விவரங்களும் தோன்றும். பயனர்கள் ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தி கட்டணம் செலுத்தலாம் என்ற தகவலையும் தெரிவிக்கும். பயனர்களின் பயத்தை பயன்படுத்தி பணத்தை கொள்ளையடிக்கின்றனர்.
தப்பிக்க வழிமுறைகள்
இதுபோன்ற மோசடியில் நீங்கள் சிக்காமல் இருப்பதற்கு, ஆபாச படங்களை பார்ப்பதை தவிர்க்க வேண்டும். அதையும் மீறி பார்க்கும்பட்சத்தில், உங்கள் கணினியின் திரையில் தோன்றும் இதுபோன்ற pop-upகளை க்ளோஸ் செய்து விட்டால், இந்த மோசடியில் இருந்து எளிதாக தப்பிவிடலாம். ஒருவேளை அந்த pop-up browser-ஐ க்ளோஸ் செய்ய முடியவில்லை என்றால், உங்கள் கணினியின் டாஸ்க் மேனேஜருக்கு சென்று (ctrl+alt+delete) browser-ன் செயல்பாட்டை நிறுத்திவிடலாம். இந்த முறைகள் எதுவும் கை கொடுக்கவில்லை என்றால், கணினியை Shut down செய்துவிட்டால் இந்த மோசடியில் இருந்து தப்பிவிடலாம்’ என ராஜசேகர் ராஜாரியா தெரிவித்துள்ளார்.
Beware of such scams where #hackers may ask you for money on the behalf of the #Ministry_of_Law_and_Justice. While browsing some websites you may get a #FullScreen Popup window and it will tell you that your PC has been locked by Ministry. Don't Pay. Check Pics... #infoSec pic.twitter.com/f2op9TmylP
— Rajshekhar Rajaharia (@rajaharia) January 24, 2022