‘இப்படியே விட்டா சரிபட்டு வராது’.. இனி அதிரடி ‘ஆக்ஷன்’ தான்.. சென்னை மக்களுக்கு மாநகராட்சி எச்சரிக்கை..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க மாநகராட்சி அதிரடி நடவடிக்கை எடுக்க உள்ளது.

சென்னையில் கொரோனா தொற்று குறைந்து வருவதால், படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் மக்கள் கூட்டமாக கூடுவதால், தொற்று அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனைக் கட்டுப்படுத்த மாநகராட்சி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி கொரோனா தொற்றை கட்டுப்படுத்த திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளில் 50 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ஹோட்டல்கள், திருமண மண்டபங்கள், விருந்து அரங்கங்கள், சமூகநலக் கூடங்கள் ஆகியவற்றில் பதிவு செய்யப்படும் திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகள் குறித்த விவரங்களை http://covid19.chennaicorporation.gov.in/covid/marriagehall/ என்ற இணையதளத்தில் தெரியப்படுத்த வேண்டும்.
திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். அதேபோல் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் அனைவரையும் சமூக இடைவெளியுடன் அமர வைக்க நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் மண்டப உரிமையாளர்கள் அறிவுறுத்த வேண்டும்
அதிக அளவில் பொதுமக்கள் ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் கூடுவதைத் தவிர்க்கும் வகையில் பொது இடங்களில் தனியார் நிகழ்ச்சிகள், மத வழிபாடுகள் நடத்த தடை விதிக்கப்படுகிறது. வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டுக்கு மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறுவோர் மீது பேரிடர் மேலாண்மை சட்ட விதிகளின்படி உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை மாநகராட்சியில் இதுவரை 60 இடங்களில் விதிமீறல் கண்டறியப்பட்டுள்ளது. அதில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் மண்டப உரிமையாளர்களிடமிருந்து ரூ.2 லட்சத்து 29 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த வாரம் அரசின் தடையை மீறி நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் மக்கள் பொது இடங்களில் அதிக அளவில் கூடுவதை தவிர்க்குமாறு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
