‘அதுமட்டும் நடந்தா கம்பெனியை மூடுறத தவிர வேறவழியில்ல’.. ‘ஷாக்’ கொடுத்த பிரபல நிறுவனம்.. கலக்கத்தில் வாடிக்கையாளர்கள்..!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்

By Selvakumar | Feb 18, 2020 01:33 PM

வோடஃபோன் நிறுவனம் அளித்துள்ள வங்கி உறுதி பத்திரங்களை, நிலுவை தொகையை ஈடுகட்டும் நோக்கில் அரசு அவற்றை பணமாக்கினால் வோடஃபோன் மூடும் நிலைக்கு தள்ளப்படும் என அந்நிறுவனம் எச்சரித்துள்ளது.

Overnight payment of dues Vodafone will have to shut down

தொலை தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், வோடாஃபோன், டாடா உள்ளிட்ட நிறுவனங்கள், தொலை தொடர்பு நடத்துவதற்கான உரிம கட்டணம், அரசின் அலைக்கற்றையை பயன்படுத்துவதற்கான கட்டணம் என கோடிக்கணக்கான ரூபாய் பாக்கி வைத்துள்ளன. இந்த பணத்தை உடனடியாக செலுத்தவில்லை என்றால் அந்த நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உச்சநீதிமன்றம் எச்சரித்தது.

இதனை அடுத்து இம்மூன்று நிறுவனங்கள் கொடுக்க வேண்டிய 1 லட்சத்து 47 ஆயிரம் கோடி ரூபாயை நள்ளிரவு 12 மணிக்குள் செலுத்த வேண்டும் என இரு தினங்களுக்கு முன்பு மத்திய அரசு அதிரடி உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து ஏர்டெல் 10,000 ஆயிரம் கோடியும், டாடா டெலிசர்வீஸ் 2,197 ஆயிரம் கோடியும் செலுத்தின. மீதமுள்ள தொகையை வரும் மார்ச் மாதம் 17ம் தேதிக்குள் செலுத்திவிடுவதாக அந்நிறுவனங்கள் நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளன.

இந்த நிலையில் முதற்கட்டமாக 2500 கோடியும், வார இறுதியில் மேலும் 1000 கோடி ரூபாயும் செலுத்துவதாக வோடஃபோன் கூறியதை நீதிமன்றம் ஏற்கவில்லை. இதுகுறித்து பேசிய அந்நிறுவனத்தின் வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, கடந்த 10 ஆண்டுகளில் தங்களது நிறுவனம் 2 லட்சம் கோடிக்கும் அதிகமான இழப்பை சந்தித்துள்ளது. ஒரே இரவில் நிலுவைத் தொகையை செலுத்த வற்புறுத்தினால் நிறுவனத்தை மூடும் நிலை ஏற்படும் என அவர் தெரிவித்தார்.

மேலும், இதன்மூலம் 50 ஆயிரம் பேருக்கு உடனடியாக வேலையிழப்பு ஏற்பட நேரிடும். 30 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் பாதிப்படைவார்கள். வோடஃபோன் அளித்துள்ள வங்கி உறுதி பத்திரங்களை, நிலுவை தொகையை ஈடுகட்டும் நோக்கில் பணமாக மாற்ற கூடாது. அப்படி நடந்தால் வோடஃபோன் மூடும் நிலைக்கு தள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2018ம் ஆண்டு ஐடியா நிறுவனத்தை வோடஃபோன் வாங்கியது. தற்போது வோடஃபோனின் நிலுவைத் தொகை, வட்டி, அபராத வட்டி எல்லாம் சேர்த்து சுமார் 25 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு செலுத்த வேண்டி வரும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஒருவேளை வோடஃபோன் மூடப்பட்டால், ஏர்டெல், ஜியோவுக்கு நேரடி போட்டியாக இருக்கும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : #JIO #VODAFONEIDEA #AIRTEL #AGR