‘கொரோனா பத்தி போலி செய்திகளையும் வதந்திகளையும் பாக்குறவங்களுக்கு!’.. பேஸ்புக் அதிரடி நடவடிக்கை!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்கொரோனா வைரஸ் பற்றிய போலிச் செய்திகளும் வதந்திகளும் சமூக வலைதளங்களில் தீயாகப் பரவியதை அடுத்து, இதைக் கட்டுப்படுத்தும் விதமாக, “போலியான தகவல்களைப் பார்க்கும் ஃபேஸ்புக் பயனாளர்களுக்கு”, அதுபற்றிய ஒரு எச்சரிக்கை நோட்டிபிகேஷனை அனுப்பவுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதனால் ஃபேஸ்புக் தடை செய்து நீக்கியுள்ள போலி செய்திகளையோ அல்லது பரப்பப் பட்ட வதந்திகளையோ பயனாளர்கள் லைக் அல்லது கமண்ட் செய்யும் பட்சத்தில், அவர்கள் உடனடியாக உலக சுகாதார நிறுவனத்தின் போலிச் செய்திகளைக் கண்டறியும் பக்கத்திற்கு பேஸ்புக் மூலம் இட்டுச் செல்லப்படுவர். இந்த புதிய முயற்சியை முன்னெடுத்துள்ளதாக ஃபேஸ்புக்கின் இண்டக்ரிடி துணைத் தலைவர் கய் ரோஸன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக கடந்த மார்ச் மாதத்தில் 40 மில்லியன் போலி பதிவுகளைத் தங்களது உண்மை கண்டறியும் நிறுவனங்கள் மூலம் கண்டுபிடித்த பேஸ்புக் நிறுவனம், கொரோனா குணமாவது பற்றிய செய்திகளில் உடலுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட பதிவுகளைக் கண்டறிந்ததோடு அவற்றை நீக்கியுள்ளது. எனினும் போலி பதிவிற்கான எச்சரிக்கையைப் பார்த்த பயனாளர்களில் ஒரு சிலர் மட்டுமே உண்மையைக் கண்டறிய முயன்றுள்ளனர்.
கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் உருவாகிய கொரோனா வைரஸ், ஜனவரியில் உலகம் முழுவதும் பரவத் தொடங்கியபோதே, பேஸ்புக், யூடியூப், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு பாப் அப் மூலம் உலக சுகாதார நிறுவனத்தின் பக்கத்துக்கு இட்டுச் செல்லத் தொடங்கியது. தவிர, கொரோனாவுக்கு போலியான குணமளிக்கும் விளம்பரங்களையும் தடை செய்தது. ஆனால் ஃபேஸ்புக் நிறுவனமோ கொரோனா வைரஸ் பற்றிய தகவல் மையத்தையே கடந்த மாதம் உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.
