'சொற்ப விலைக்கு'... '26.7 கோடி ஃபேஸ்புக் பயனர்களின் டேட்டாவை'... 'வெளியான அதிர்ச்சி தகவல்’!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்சுமார் 26.7 கோடி பேஸ்புக் பயனர்களின் தகவல்களை ஹேக்கர் குழு, வலைத்தளத்தில் விற்பனை செய்த தகவல் தற்போது அம்பலமாகியுள்ளது.

பிரபல வீடியோ கான்ஃபரன்ஸிங் செயலியான ஜூம் பாதுகாப்பானது இல்லை என இந்திய அரசாங்கம் தெரிவித்தது. அதை நிரூபிக்கும் வகையில் சில நாள்களுக்கு முன் 5,00,000 ஜூம் செயலி பயனர் தகவல்கள் டார்க் வெப்பில் (Dark Web) விற்பனைக்கு இருந்ததாக ஜார்ஜியாவைச் சேர்ந்த சைபர் குற்றங்களைக் கண்டறியும் நிறுவனமான சைபிள் (Cyble) கண்டறிந்தது. தற்போது மேலும் அதிர்ச்சியளிக்கும் விதமாக ஃபேஸ்புக்கின் (Facebook) பயனர் தகவல்கள் டார்க் வெப்பில் விற்கப்பட்டதையும் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்திருக்கிறது அந்த நிறுவனம்.
இது குறித்து அந்நிறுவனத்தின் வலைப்பதிவில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது, "267 மில்லியன் ஃபேஸ்புக் பயனர்களின் தகவல்களை 500 யூரோஸ் விலைக்கு டார்க் வெப்பில் விற்பனைக்கு இருந்தது. அதில் பயனர்களின் பெயர், மின்னஞ்சல் முகவரி, மொபைல் எண், ஃபேஸ்புக் ஐ.டி ஆகிய தகவல்கள் இருந்தன. அவை உண்மையான பயனர்களின் தகவல்கள் தானா என உறுதி செய்யும் பொருட்டு, அந்தத் தகவல்களை வாங்கி சோதனை செய்தோம். அவை உண்மையான முகநூல் பயனர்களின் தகவல்கள்தான்".
500 யூரோஸ் என்பது இந்திய ரூபாய் மதிப்பில் 41,799 ரூபாய். இவ்வளவு குறைவான விலையில் 26.7 கோடி பயனர் தகவல் என்பது அதிர்ச்சி அளிக்கக்கூடிய செய்தி. ஆனால் இதில் பாஸ்வேர்டுகள் எதுவும் பகிரப்படவில்லை. ஆனால் இந்த மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண்களை மட்டும் வைத்தே மேலும் பல்வேறு தகவல்களைப் பெற முடியும். கேம்பிரிட்ஜ் அனாலிடிகா பிரச்னையில் சிக்கியதிலிருந்தே பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் அதிகமாகக் கவனம் செலுத்தி வருகிறது ஃபேஸ்புக். தற்போது டார்க் வெப்பில் கிடைத்திருக்கும் இந்தத் தகவல்களும் அதற்கு முன்னர் ஹேக் செய்யப்பட்டதுதான். தற்போது எந்த விதமான சம்பவங்களும் நடைபெறவில்லை.
