'தடபுடல் அலங்காரம்'.. 'சிறப்பு பூஜை'.. இந்த ரணகளத்துலயுமா இப்படி? .. டாஸ்மாக் கடை மீது பாய்ந்த அதிரடி நடவடிக்கை!
முகப்பு > செய்திகள் > தமிழகம்இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 53 ஆயிரத்தைத் தாண்டியுள்ள நிலையில், தமிழகத்தில் சென்னையைத் தவிர்த்த பிற இடங்களில் டாஸ்மாக் கடைகள் இன்று முதல் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் இன்று போலீஸார் மற்றும் தன்னார்வலர்களின் காவல் உதவியுடன், தனிமனித இடைவெளிகள் கடைபிடிக்கப்பட்டு டாஸ்மாக் கடைகள் சென்னை நீங்கலாக தமிழ்நாடு முழுவதும் திறக்கப்பட்டுள்ளன. இதனை பொருட்டு நேற்றையதினம் சமூக இடைவெளிகளை பின்பற்றுவதற்கு ஏதுவான ஏற்பாடுகளை டாஸ்மாக் கடைகளில் ஊழியர்கள் செய்தனர்.
ஆனால் கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் குளத்துப்பாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மட்டும் சிறப்பு பூஜைகள் செய்து, வாழைமரம், மாவிலைத் தோரணங்கள் கட்டப்பட்டு தடபுடலாக செய்யப்பட்ட ஏற்பாடுகள் புகைப்படங்களாக சமூக வலைதளங்களில் வைரலாகின. இதுபற்றி வருவாய்துறைக்குத் தகவல் போனதை அடுத்து பேரூர் தாசில்தார் ராதாகிருஷ்ணனின் உத்தரவின் பேரில், அந்த டாஸ்மாக் கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில், “டாஸ்மாக் கடைகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடலாம். ஆனால் அலங்காரப்படுத்துவதை இந்த காலச் சூழ்நிலையில் ஏற்க முடியாது” என்று விளக்கம் அளிக்கப்பட்டது.
