‘நார்த்ல ஓகே.. பட் சவுத்ல பாஜக-வின் நிலவரம் என்ன?? கள விவரம் உள்ளே!’

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | May 23, 2019 12:10 PM

தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் வட இந்தியாவில் கோலோச்சும் பாரதிய ஜனதா கட்சி, தென் இந்தியாவில் அதன் நிலவரம் எவ்வாறு உள்ளது எனக் காணலாம்.

lok sabha election 2019 BJP status in south india

மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகிறது. வேலூர் நீங்கலாக 542 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தற்போதைய நிலவரப்படி தனி கட்சியாக பா.ஜ.க. அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது.

தென் இந்தியாவில் பாரதிய ஜனதா கட்சி போட்டியிட்டுள்ள தொகுதிகளில் அதன் நிலவரம் எவ்வாறு உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை, ஆளும் அ.தி.மு.க. உடன் கூட்டணி வைத்து பா.ஜ.க. போட்டியிட்டுள்ளது. தேசிய கட்சியான காங்கிரஸ், தி.மு.க. உடன் சேர்ந்து போட்டியிட்டுள்ளன. இதில் பா.ஜ.க. ஒரு இடத்தில் கூட முன்னிலை வகிக்கவில்லை. தமிழகத்தில் மொத்தம் உள்ள 39 இடங்களில் வேலூர் நீங்கலாக, 38 இடங்களுக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதில் தி.மு.க. கூட்டணி  36 இடங்களிலும், அ.தி.மு.க. கூட்டணி 2 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. தமிழகத்தில் பா.ஜ.க ஒரு இடத்தில் கூட முன்னிலையில் இல்லை.

புதுச்சேரியில் உள்ள ஒரு மக்களவைத் தொகுதியில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி கட்சி முன்னிலை வகிக்கிறது. கேரளாவில் மொத்தம் உள்ள 20 மக்களவைத் தொகுதிகளில் 18 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் உள்ளது. ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி 2 இடங்களிலும், பா.ஜ.க முழுமையாக பின்னடைவை சந்தித்துள்ளது.

கர்நாடகாவை பொறுத்தவரை மொத்தம் உள்ள 28 தொகுதிகளில் ஆளும் மதசார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி பின்னடைவை சந்தித்துள்ளது. பா.ஜக. அங்கு 23 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. 5-ல் மட்டுமே காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகிக்கிறது.

இதேபோல், ஆந்திராப்பிரதேசத்தில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில், ஜெகன் மோகன் ரெட்டியின் ஒ.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியே முன்னிலை வகிக்கிறது. சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் ஒரு இடத்தில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ், பாஜ.க. முழுமையாக பின்னடைவை சந்தித்துள்ளன.

இதேபோல் தெலுங்கானாவில் மொத்தம் உள்ள 17 மக்களவைத் தொகுதிகளில் சந்திரசேகரராவ்வின் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியே முன்னிலையில் உள்ளது. பா.ஜ.க. 5 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. தென் இந்தியாவை பொறுத்தவரை கர்நாடகாவை தவிர, கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் பா.ஜ.க. பெரும் பின்னடைவை சந்தித்து உள்ளது.