'ரிசல்ட் வந்து சில மணி நேரத்திலேயே ரெடி ஆன ‘முதல்வர்’ நேம் போர்டு'.. 'என்னா கான்ஃபிடன்ஸ்’ வைரல் புகைப்படம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | May 23, 2019 12:55 PM

சட்டசபை தேர்தலில் அமோக வாக்குகளை பெற்று, ஆந்திரப்பிரதேசத்தில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சி முதன்முறையாக ஆட்சி அமைக்கிறது.

jagan mohan reddy leads in andhra pradesh assembly election

ஆந்திர மாநிலத்தில், நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெற்றது. அதன்படி அங்குள்ள 175 சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் 25 மக்களவைத் தொகுதி ஆகிய இரண்டுக்கும் சேர்த்து, கடந்த மாதம் ஏப்ரல் 11-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதன் வாக்குகள் வியாழக்கிழமையன்று எண்ணப்பட்டன.

2014-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், தெலுங்கு தேசம் கட்சி 103 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. ஆனால், அந்த தேர்தலில்  ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வெறும் 66 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. கடந்த ஐந்து வருடங்களில், தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சிக்கு எதிராக நிறையப் போராட்டங்களை நடத்தினார் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி.

அதே வேளையில், மறுபுறம் மக்களிடையே தன் செல்வாக்கைக் கொண்டு செல்வதிலும் அதிக கவனம் செலுத்தினார். இதன் எதிரொலியாகவே, தற்போது நடைபெற்று முடிந்துள்ள ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றதாகக்  கூறப்படுகிறது. கருத்து கணிப்புகளில் ஒ.எஸ்.ஆர். காங்கிரஸே வெற்றிபெறும் என்று கூறப்பட்டது.

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு பல்வேறு சோதனைகளில் உறுதுணையாக இருந்தவர் நடிகை ரோஜா. இவர் நகரி தொகுதியில் போட்டியிட்டார். மாநிலத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சி அமைந்து இவரும் வெற்றி பெற்றுவிட்டால் ரோஜாவுக்கு மாநில அமைச்சரவையில் இடம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்நிலையில் நடிகை ரோஜா நகரி தொகுதியில் வெற்றிபெற்றுள்ளார்.

ஆந்திர மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க 88 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். நேற்றிரவு நிலவரப்படி 88 தொகுதிகளில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இவர்கள் ஆட்சி அமைப்பது உறுதியானது. அதேபோல் தெலுங்கு தேசம் கட்சி, 27 இடங்களுக்கு மேல் முன்னிலை பெறவில்லை. எனவே ஆந்திரத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியை பிடிப்பதுடன் முதல்முறையாக ஜெகன் மோகன் ரெட்டி முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

இந்நிலையில் வரும் 30-ம் தேதி ஜெகன் மோகன் ரெட்டி, விஜயவாடாவில் உள்ள இந்திரா மைதானத்தில் முதல்வராக பதவியேற்க உள்ளார். இதில் நடிகை ரோஜா உள்பட பலர் அமைச்சர்களாக பதவி பிரமாணம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.