‘அவர் பேசுனது எல்லாம்’... ‘எச்சரிக்கை விடுத்த’... ‘சென்னை உயர்நீதிமன்றம்’... !

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Jan 20, 2020 06:01 PM

அதிமுக அரசால் போடப்பட்ட அவதூறு வழக்கு ஒன்றின் விசாரணையில் தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Vijayakanth Condemned by Chennai HC in Defamation Case

கடந்த 2012-ம் ஆண்டு தேனியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், அப்போதைய முதல்வராக இருந்த ஜெயலலிதாவை விமர்சித்து பேசியதாக, தமிழக அரசு தரப்பில், அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இதனை ரத்து செய்யக்கோரி விஜயகாந்த் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணையின்போது, இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என்று உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார். இதனை எதிர்த்து விஜயகாந்த் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தாங்கள் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெறுவதாக விஜயகாந்த் தரப்பு வழக்கறிஞர் நீதிபதிகளிடம் கேட்டுக் கொண்டார். இதற்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேல் முறையீட்டு மனுவில் கடுமையான குற்றச்சாட்டுக்களை கூறி விட்டு, தற்போது வழக்கை வாபஸ் பெற அனுமதி கேட்பது, நீதிமன்ற நேரத்தை வீணடிப்பது போன்றது என்பதால் அபராதம் விதிக்கலாம் என நீதிபதிகள் எச்சரித்தனர்.

மேலும், எதிர்கட்சி தலைவராக இருந்த விஜயகாந்த் பேசிய பேச்சுக்கள் அவதூறானவையே எனத் தெரிவித்த நீதிபதிகள், எதிர்கட்சிகள் எப்படி செயல்பட வேண்டும் என துணை குடியரசு தலைவர் தெரிவித்துள்ளதையும் சுட்டிக்காட்டினர். மேலும், மனுதாரர் தரப்பில் கேட்டுக் கொண்டதால் அபராதம் விதிப்பதை தவிர்ப்பதாக கூறிய நீதிபதிகள், எதிர்காலத்தில் இதுபோல செயல்படக் கூடாது எனவும் விஜயகாந்த் தரப்புக்கு அறிவுறுத்தினர்.