'கோயிலை தோண்டியபோது கிடைத்த தங்க புதையல்’... ‘அரசிடம் ஒப்படைக்க மறுத்து கிராம மக்கள் வாக்குவாதம்’...!!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்காஞ்சிபுரம் உத்திரமேரூர் கோயில் புனரமைப்பின்போது கிடைத்த தங்க புதையலை எடுத்துச் சென்ற கிராம மக்கள் அதை கொடுக்க மறுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் இரண்டாம் குலோத்துங்கச் சோழன் காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படும் குழம்பேஸ்வரர் கோவில் உள்ளது. 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயில், சிதிலமடைந்த நிலையில் உள்ளது. இதனால் இக்கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த, கோவில் விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் முடிவு செய்தனர்.
இந்நிலையில் கோவில் கருவறையின் நுழைவுவாயிலின் முன் உள்ள கருங்கற்களாலான படிக்கட்டுகளை திருப்பணிக் குழுவினர் அகற்றினர். அப்போது அதன் கீழ் துணியால் சுற்றப்பட்ட சிறிய அளவிலான மூட்டை இருந்தது. அதை பிரித்து பார்த்தபோது ஏராளமான தங்க ஆபரணங்கள் இருந்தன. இதற்கிடையில் வருவாய்த்துறை அனுமதி இல்லாமல் பழமையான கோவிலை ஊர்மக்கள் முழுவதுமாக இடித்து தரைமட்டமாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து கோவில் இடிப்பு மற்றும் தங்க புதையல் கிடைத்த தகவலின்படி கிடைக்கப்பெற்ற தங்கத்தை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்வதற்காக கோவில் அமைந்துள்ள பகுதிக்கு செல்லும் பொழுது அப்பகுதி மக்களுக்கும் வருவாய் துறைக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சிலவற்றை வருவாய்துறையினர் கைப்பற்றி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் புதையலாக கிடைத்த பழங்காலத்து தங்கத்தை அப்பகுதி பொதுமக்கள் சிலர் எடுத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது. கடந்த 16 ஆம் நூற்றாண்டில், அன்னியர்கள் படையெடுப்பு காரணமாக அக்காலத்தில் வாழ்ந்த முன்னோர்கள் போர் பதற்றத்தின் அச்சுறுத்தல் காரணமாகவே சாமி சிலைகளுக்கு அலங்காரம் செய்வதற்காக உருவாக்கப்பட்ட தங்க நகைகளை இந்த கோவிலின் பல்வேறு பகுதிகளில் புதைத்து வைத்து இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
தற்போது பொதுமக்களால் கையகப்படுத்தப்பட்ட தங்க நகைகளின் மதிப்பீடு குறித்து வருவாய்த் துறையும் காவல் துறையும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் கிடைத்த ஆபரணங்களை அரசிடம் ஒப்படைக்குமாறு கோட்டாட்சியர், ஊர் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். எனினும் அந்த நகைகளை தர முடியாது என்பதில் கிராம மக்கள் உறுதியாக உள்ளனர். இந்த நகைகளை புதிய கோயிலுக்கு அடியில் பத்திரமாக வைக்க கிராம மக்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.