திருமணத்தை மீறிய உறவு.. தலைமறைவான ஜோடி லெட்டர் எழுதி வச்சுட்டு எடுத்த விபரீத முடிவு.. பரபரப்பில் தூத்துக்குடி..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தூத்துக்குடியில் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக சொல்லப்படும் ஆண் மற்றும் பெண் தங்களது உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே வெள்ளாரம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் மயிலேறி. 40 வயதான இவர் அருகே உள்ள டாஸ்மார்க் கடையில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 3 மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் இதே பகுதியை சேர்ந்த கணவனை இழந்த பெண் ஒருவருக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து கடந்த 28 ஆம் தேதி இருவரும் தலைமறைவாகினர்.
புகார்
இந்நிலையில், தனது கணவர் மற்றும் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரும் சேர்ந்து தலைமறைவாகி இருப்பதாகவும் அவர்களை கண்டுபிடித்துத் தரும்படியும் காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார் மயிலேறியின் மனைவி. இதனைத் தொடர்ந்து தலைமறைவான இருவரையும் காவல்துறையினர் தேடிவந்தனர். இதனிடையே ஓட்டப்பிடாரம் அருகே வெள்ளாரம் கிராமத்திற்கு கிழக்கே உள்ள காட்டுப் பகுதியில் ஒரு ஆண் மற்றும் பெண்மணியின் உடல்கள் கிடப்பதாக ஒட்டப்பிடாரம் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
விபரீத முடிவு
இதனையடுத்து காட்டுப் பகுதிக்கு விரைந்துசென்ற காவல்துறையினர், அது தலைமறைவான மயிலேறி மற்றும் அந்தப் பெண்தான் என்பதை கண்டறிந்தனர். போலீசார் நடத்திய ஆய்வில் கடிதம் ஒன்று கிடைத்ததாக தெரிகிறது. அந்த கடிதத்தில்,"எங்களது இந்த முடிவிற்கு யாரும் காரணம் இல்லை. நாங்களே காரணம். நாங்களே எங்களது முடிவை தேடிக்கொள்கிறோம். இதுகுறித்து யாரையும் விசாரணை செய்யவேண்டாம்" எழுதப்பட்டு மயிலேறி மற்றும் அந்தப் பெண் கையெழுத்திட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதன் பிறகு இறந்தவர்களின் உடல்களை தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தூத்துக்குடி அருகே, திருமணத்தை மீறிய உறவால் ஆண் மற்றும் பெண் தங்களது உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அப்பகுதி முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது.
தீர்வல்ல
எந்த ஒரு பிரச்சினைக்கும் உயிரை மாய்த்துக் கொள்வது தீர்வாகாது. மன ரீதியான அழுத்தம் ஏற்பட்டாலோ, எதிர்மறை எண்ணம் எழுந்தாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்க்கண்ட எண்களுக்கு தொடர்பு கொண்டு ஆலோசனை பெறவும்.
மாநில உதவிமையம் : 104 .
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

மற்ற செய்திகள்
