'சென்னை'.. 'கனமழை'.. 'செம்பரம்பாக்கம்'.. 'வெள்ளம்' - தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ள ‘முக்கிய’ தகவல்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்செம்பரபாக்கம் ஏரி திறப்பு குறித்து சென்னை மக்கள் அச்சப்படுவது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
செம்பரம்பாக்கம் ஏரிக்கு பூண்டி ஏரியில் இருந்து நீர் வரத்து வருவது வழக்கம். தற்போது அந்த நீர் மட்டம் உயர்ந்ததை அடுத்து பூண்டி ஏரியில் இருந்து வரும் நீரானது நிறுத்தி வைக்கப்பட்டது. தொடர் மழையின் காரணமாக 24 அடி உயரம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியானது தற்போது 20 அடிக்கு மேல் உயர்ந்துள்ளது.
எனினும் 22 அடிக்கு மேல் சென்றால் மட்டுமே நீரை திறந்து விட வாய்ப்புள்ளதாகவும் தற்போதைக்கு நீரை திறந்து விட வாய்ப்பில்லை என்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் இதுபற்றி கூறியுள்ளார், அதில், “ஏரியின் கொள்ளளவு தற்போது 2.6 டிஎம்சி ஆக உள்ளது. ஆனால் ஏரியின் மொத்த கொள்ளளவு 3.6 டிஎம்சி. ஏற்கனவே ஏரியின் கொள்ளளவு 80 சதவீதமாக மட்டுமே நிரம்பி இருக்கிறது. வரும் 24ம் தேதி வரை அங்கங்கே மழை பெய்யக்கூடும். 25ம் தேதிக்கு பிறகு கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது.
அந்த நிலவரத்தை பொறுத்து தான் எந்த இடங்களில் அதிக மழை பொழியும் என்கிற விவரங்கள் தெரியும். ஏரி திறந்துவிடப்பட்டாலே வெள்ளம் என நினைக்கக்கூடாது. அடையாறு நதியானது ஓரளவு பெரிய நதி. 10 ஆயிரம் கன அடி அதில் சென்றாலும் குடிமக்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது. 2015க்கு பின் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. ஆகையால் தற்போது மக்கள் தேவையில்லாமல் வெள்ளம் குறித்து அச்சப்படத் தேவையில்லை” என்று தெரிவித்துள்ளார்