'கொத்துக் கொத்தாக போன உயிர்கள்'... 'வீதியில் நின்று கதறிய மக்கள்'... '45 ஆயிரத்தை கடந்த பலி'... வல்லரசு அமெரிக்காவில் என்ன நடக்கிறது?
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் கொரோனாவுக்கு நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 802 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் உலக அளவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு பக்கம் கொரோனா வைரஸின் தாக்கம் வேகமாகப் பரவி வரும் நிலையில், மற்றொரு பக்கம் அதற்கான தடுப்பு மருந்தைக் கண்டுபிடிப்பதற்காக, விஞ்ஞானிகள் தீவிரமாக முயன்று வருகிறார்கள். தற்போதைய நிலவரப்படி, 25 லட்சத்து 56 ஆயிரத்து 421 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் கோரத்தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இதுவரை ஒரு லட்சத்து 77 ஆயிரத்து 439 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் கொரோனா தற்போது அமெரிக்காவில் ருத்திர தாண்டவம் ஆடி வருகிறது. வைரஸ் பரவியவர்கள் மற்றும் கொரோனாவிற்கு பலியானவர்களின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இந்தச்சூழ்நிலையில் நேற்று அங்குப் பலி எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, அந்நாட்டில் 8 லட்சத்து 19 ஆயிரத்து 805 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. குறிப்பாக நேற்று ஒரே நாளில் புதிதாக 27 ஆயிரத்து 46 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனாவின் கோரத் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 802 பேர் பலியாகியுள்ளனர். இதனால் அமெரிக்காவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 45 ஆயிரத்து 316 ஆக அதிகரித்துள்ளது. பெரும் வல்லரசு நாடான அமெரிக்காவால் ஏன் பலி எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த முடியவில்லை, கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை, எனப் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
இதனிடையே அங்கு எங்கு சென்றாலும் மக்களின் அழுகுரல் மட்டுமே கேட்கிறது. அடுத்து என்ன நடக்குமோ என்ற பயத்தில் அவர்கள், நாட்களை கடத்தி வருவதாக அதிர்ச்சியுடன் கூறியுள்ளார்கள்.
