'மனித அறிவு' கொரோனாவை விட 'சக்தி வாய்ந்தது...' 'நம்பிக்கை தரும் ஆக்ஸ்போர்டு' விஞ்ஞானிகள் குழு...' 'நாளை' முதல் மனிதர்களிடம் 'தடுப்பூசி சோதனை...'

முகப்பு > செய்திகள் > உலகம்

By Suriyaraj | Apr 22, 2020 12:27 PM

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தயாரித்துள்ள கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து நாளை முதல் மனிதர்களிடம் பரிசோதிக்கப்படும் என இங்கிலாந்து சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Coronavirus vaccine trial on human beings tomorrow-Oxford

உலகம் முழுவதும் இதுவரை 25 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 76 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

தடுப்பு மருந்து தயாரிக்க பல்வேறு நாடுகள் முயன்று வருகின்றன. அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் தடுப்பு மருந்தை தயாரித்து அதை மனிதர்களிடம் சோதிக்கும் பணியை தொடங்கி விட்டது. இந்நிலையில் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கொரோனா வைரசுக்கான மருந்தை கண்டுபிடித்துவிட்டதாக அறிவித்தது. இந்த மருந்தை நாளை முதல் மனிதர்களிடம் சோதனை செய்ய உள்ளதாக கூறியுள்ளது.

இதுகுறித்து, இங்கிலாந்தின் சுகாதாரத் துறை செயலர் மட் ஹான்காக் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "புதிய நோயான கொரோனா வைரஸை நீண்ட கால நோக்கில் தோற்கடிப்பதற்கு சிறந்த வழி தடுப்பு மருந்து மட்டுமே. தடுப்பு மருந்து கண்டறியும் உலகளாவிய முயற்சியில் இங்கிலாந்து முன்னணியில் உள்ளது. தடுப்பூசிக்கான உலகளாவிய தேடலில் வேறு எந்த நாட்டையும் விட அதிகமான பணத்தை இங்கிலாந்து அளித்திருக்கிறது. ஆக்ஸ்போர்டு மற்றும் இம்பீரியல் பல்கலைக்கழகத்தில் தடுப்பு மருந்து உருவாக்கும் பணிகள் சிறப்பான முன்னேற்றத்தை அடைந்துள்ளன.

இம்பீரியல் பல்கலைக்கழகத்தின் இரண்டாம் கட்ட மருத்துவ சோதனைகளுக்காக 22.5 மில்லியன் பவுண்ட்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆக்ஸ்போர்டு விஞ்ஞானிகள் குழுவினரின் ஆராய்ச்சிக்காக 20 மில்லியன் பவுண்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆக்ஸ்போர்டின் பல்கலைக்கழக மருத்துவக் குழு தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளது. இதையடுத்து. நாளை முதல் ஆக்ஸ்போர்டு குழுவினரது தடுப்பு மருந்து மனிதர்களிடம் பரிசோதிக்கப்படும். கொரோனா வைரஸ் ஒரு சக்திவாய்ந்த எதிரி. ஆனால் மனித அறிவின் சக்தி அதை விட வலுவானது என்று நான் நம்புகிறேன்." என அவர் தெரிவித்தார்.