‘மோசமான நிலையில் இருக்கும் நாடுகள்’... ‘இருமடங்கு உயரும் அபாயம்’... 'ஐ.நா எச்சரிக்கை'!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Sangeetha | Apr 21, 2020 10:03 PM

கொரோனாவால் பொருளாதாரம் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில், உலக அளவில் பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கை இருமடங்கு உயரும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு திட்ட அமைப்பு எச்சரித்துள்ளது.

Coronavirus crisis could double no of people suffering acute hunger

கொரோனா பரவல் காரணமாக உலக நாடுகள் ஊரடங்கு நடவடிக்கையை எதிர்கொண்டுள்ளன. தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் தொழிற்செயல்பாடுகள் முற்றிலும் முடங்கியுள்ளன. இதன் விளைவாக, கோடிக்கணக்கான பேர் வேலையிழப்பை எதிர்கொண்டுள்ளனர். இந்நிலையில் இந்த ஆண்டு பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கை 26.5 கோடியாக உயரும் என்று ஐ.நா தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே உலக அளவில் போதிய உணவின்றி பசியால் வாடுபவர்கள் பட்டியலில் 13.5 கோடி மக்கள் உள்ளனர். தற்போதைய சூழலில் கூடுதலாக 13 கோடி மக்கள் அந்தப் பட்டியலில் இணையக்கூடும் என்று குறிப்பிட்டுள்ளது. ‘‘தற்போதைய சூழலை எதிர்கொள்ள நாம் ஒன்றினைய வேண்டும். இல்லையென்றால் உலகம் பெரும் விலை கொடுக்க நேரிடும். மிகப் பெரும் அளவில் உயிரிழப்பு ஏற்படும். கோடிக்கணக்கான மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து உணவின்றி தவிப்பார்கள்’’ என்று ஐ.நா-வின். உலக உணவு திட்டத்தின் தலைமை பொருளாதார நிபுணரும் ஆராய்ச்சி, மதிப்பீடு மற்றும் கண்காணிப்பு இயக்குநருமான ஆரிஃப் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

மிகக் குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகளில் நிலைமை மிக மோசமடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் நிலைமை மோசமடைந்து வருவதாக சமீபத்தில் ஐ.நா அறிக்கை வெளியிட்டு இருந்தது. கிட்டத்தட்ட 40 கோடி அமைப்புசாரா தொழிலாளர்கள் கடும் வறுமையை எதிர்கொள்வார்கள் என்று குறிப்பிட்டிருந்தது.