‘ஒரு கைதான் போச்சு’.. ‘ஆனா தன்னம்பிக்கை போகல’.. 30 வருஷம் ‘ஒரே’ கையால் உழைத்து குடும்பத்தை காப்பாற்றும் ‘சூப்பர்மேன்’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்விபத்தில் ஒரு கையை இழந்தாலும் தன்னம்பிக்கையை இழக்கமால் 30 வருடமாக ஒரே கையால் உழைத்து மாற்றுத்திறனாளி ஒருவர் குடும்பத்தை காப்பாற்றி வருகிறார்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். 11ம் வகுப்பு வரை படித்துள்ள இவர் ஊரில் விவசாயம் செய்து வந்துள்ளர். பின்னர் 1986ம் ஆண்டில் இருந்து வல்கனைசிங் கடையை நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த 1990ம் ஆண்டு ஏற்பட்ட விபத்து ஒன்றில் ஆறுமுகத்தின் இடது கை செயலிழந்துள்ளது. ஒரு கை போனதால் வீட்டில் முடங்கி விடாமல் தொடர்ந்து வல்கனைசிங் தொழிலை செய்து வருகிறார்.
பேருந்து, லாரி போன்ற கனரக வாகனங்களின் டயர்களை கழற்ற மட்டுமே அவருக்கு மற்றவர்களின் உதவி தேவைப்படுகிறது. மற்றபடி பஞ்சர் ஒட்டுவது, டயரில் உள்ள ரிங் டிரம் கழற்றுவது, டயரில் காற்று அடிப்பது உள்ளிட்ட வேலைகளை தனது ஒரு கையாலையே தன்னம்பிக்கையுடன் செய்து வருகிறார்.
இதுகுறித்து கூறிய ஆறுமுகம், ‘30 ஆண்டுகளாக என் ஒரு கையால் மட்டுமே இந்த வேலையை செய்து வருகிறேன். எனக்கு மனைவி, இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் கல்லூரியிலும், இளைய மகள் 11ம் வகுப்பும் படித்து வருகின்றனர்’ என கூறினார். ஒரு கை இழந்தாலும் தனது தன்னம்பிக்கையை இழக்காமல் ஒரே கையால் வல்கனைசிங் தொழில் செய்து குடும்பத்தை திறம்பட காப்பாற்றி வரும் ஆறுமுகம் பலருக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறார்.

மற்ற செய்திகள்
