'மக்களுக்கு வந்துள்ள பீதி'... 'இத கண்டிப்பா பண்ணாதீங்க'...தனியார் மருத்துவமனைகளுக்கு முக்கிய உத்தரவு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா தாக்கத்துக்கு உள்ளானவர்கள் சென்ற, வணிக வளாகங்களுக்கோ அல்லது வேறு சில இடங்களுக்கோ சென்ற பொதுமக்கள் அச்சத்தில் உள்ள நிலையில், தமிழக சுகாதாரத்துறை முக்கிய உத்தரவு ஒன்றை தனியார் மருத்துவமனைகளுக்கு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவுக்கு பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில், இருமல், காய்ச்சல், மூச்சுத் திணறல் போன்றவை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கான அறிகுறிகள் ஆகும். இந்தசூழ்நிலையில் கொரோனா தாக்கத்துக்கு உள்ளானவர்கள் வந்த சென்னை விமான நிலையத்துக்கோ, அவர்கள் சென்ற வணிக வளாகங்களுக்கோ அல்லது வேறு சில இடங்களுக்கோ சென்ற பொதுமக்கள் அச்சத்தில் உறைந்திருக்கிறார்கள்.
லேசான இருமல், காய்ச்சல் இருந்தாலே, தங்களுக்கும் கொரோனா தாக்கம் இருக்குமோ என்ற பயம் காரணமாக, பலர் தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக செல்கிறார்கள். அதே போன்று வேறு சிலர், கொரோனா தொற்று இருந்தால் நம்மை தனிமைபடுத்தி விடுவார்கள் மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் நம்மை வெறுத்து ஒதுக்கி விடுவார்கள் என்ற பயம் காரணமாக, மருத்துவமனைக்கு செல்லாமல் சில மாத்திரைகளை சாப்பிட்டு விட்டு வீட்டிலேயே இருந்து விடுகிறார்கள்.
இதனால் நோயின் தாக்கம் அந்த நபர்களுக்கு இருந்தால், அது மற்றவர்களுக்கும் பரவ வாய்ப்பிருக்கிறது. இந்நிலையில் இருமல், காய்ச்சல், மூச்சுத் திணறல் போன்ற பிரச்சனைகளோடு, யாராவது சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு வந்தால், அவர்களை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்த வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக மருந்தகங்கள் காய்ச்சல், இருமலுக்கு மருந்து கொடுக்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
