சவுரவ் கங்குலிக்கு கொரோனா.. திரைப்பட நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டாரா??.. புதிய தகவலால் மேலும் பரபரப்பு
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகொல்கத்தா : பிசிசிஐ தலைவரான சவுரவ் கங்குலிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், சமீபத்தில் அவர் ஒரு திரைப்பட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சம்பவம், மேலும் பரபரப்பை ஏற்படுத்தியள்ளது.

இந்தியாவில் உருமாறிய தொற்றான ஒமைக்ரான், பல மாநிலங்களில் வேகமாக பரவி வருகிறது. இதற்கு முன்பு தோன்றிய உருமாறிய கொரோனா தொற்றினை விட, இதன் வீரியமும், பரவும் தன்மையும் அதிகம் என கூறப்படுகிறது. மேலும், புத்தாண்டும் நெருங்கி வருவதால், மக்கள் அனைவரும் இத்தகைய சூழலில் மிக பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரும், பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
மருத்துவமனையில் அனுமதி
கங்குலிக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உடனடியாக அவரது குடும்பத்தினர், அவரை மருத்துவமனைக்கு நேற்றிரவு அழைத்துச் சென்றனர். அங்கு அனுமதிக்கப்பட்ட கங்குலிக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளபட்டது. இதன் முடிவில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பதும் உறுதியானது. கொல்கத்தாவிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், முன்னதாக இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் அவர் செலுத்தியுள்ளார்.
திரைப்பட நிகழ்ச்சி
அது மட்டுமில்லாமல், அவரது உடல்நிலை மிகவும் சீராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், உருமாறிய ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டிருக்குமா என்பதற்காகவும் ரத்த மாதிரிகள் விரைவில் பரிசோதனை செய்யப்படவுள்ளது. இதனிடையே, பெங்கால் திரைப்பட நடிகரும், எம்,பியுமான தேவ் அவர்கள் நடித்த புதிய படம் ஒன்றின் திரையிடலின் போது, கங்குலி கலந்து கொண்டுள்ளார். அந்த நிகழ்ச்சியில், சில அரசியல் பிரமுகர்கள் மற்றும் திரை பிரபலங்களும் கலந்து கொண்டுள்ளார்.
ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை
இதனால், அங்கு வந்தவர்களுக்கும் பரவியிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்தாண்டின் ஜனவரி மாதம், நெஞ்சுவலி காரணமாக இரண்டு முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கங்குலிக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
