'தமிழக' சட்டமன்ற தேர்தல்... உறுதியான 'அதிமுக' - 'பாமக' கூட்டணி!!... ஒதுக்கப்பட்ட 'தொகுதி'கள் எத்தனை??..
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதியன்று, ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதாக, தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நேற்று தெரிவித்திருந்தார்.
இதற்காக வேட்பு மனு தாக்கல் செய்ய இறுதி நாள் மார்ச் 19 என்றும், வேட்புமனு பரிசீலனை செய்ய மார்ச் 20 ஆம் தேதி என்றும், வேட்புமனு திரும்ப பெற மார்ச் 22 இறுதி தேதி என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், மே மாதம் இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், தேர்தல் நாள் குறித்த அறிவிப்பு வெளிவந்தது முதலே தமிழக அரசியல் களம் பரபரப்படைய ஆரம்பித்துள்ளது. பல கட்சிகள் கூட்டணி குறித்த முடிவுகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து, அதிமுக கூட்டணியில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சிக்கு தொகுதி பங்கீடு குறித்த ஆலோசனை நடைபெற்று வந்தது.
இறுதியில், அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில், அதிமுக சார்பில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ் மற்றும் ஜி.கே. மணி ஆகியோர் கையெழுத்திட்டனர்.
20 ஆண்டுகளுக்கு பிறகு அதிமுகவுடன் இணைந்து, பாமக சட்டமன்ற தேர்தலை சந்திக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.