VIDEO : '13 பேர் மரணத்திற்கு'... 'உண்மைக் காரணம் யார்?!!'... - 'நீட் தேர்வு விவகாரத்தில் முதலமைச்சர் ஆவேசப் பேச்சு'... 'சட்டப்பேரவையில் காரசார விவாதம்'...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நீட் தேர்வை கொண்டு வந்து 13 பேருடைய மரணத்திற்கு காரணமானது திமுக கூட்டணி தான் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக கூறியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று எதிர்க்கட்சித் தலைவரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், நீட் தேர்வு விவகாரம் குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார். அப்போது பேசிய அதிமுக எம்எல்ஏ இன்பதுரை, மத்தியில் முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தபோதுதான் 2010ஆம் ஆண்டு நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதாகவும், இதை திமுக முழுமையாக ஆதரித்ததாகவும் கூறினார். அப்போது குறுக்கிட்ட திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கருணாநிதி முதலமைச்சராக இருந்தவரை நீட் தேர்வு கொண்டு வரப்படவில்லை என்றார்.
தொடர்ந்து பேசிய இன்பதுரை, நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு உச்சநீதிமன்றம் விலக்கு அளிக்க இருந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம், நீட் தேர்வுக்கு ஆதரவாக வாதாடி அதனை தடுத்துவிட்டதாக கூறினார். திமுக குறித்து இன்பதுரை கூறிய கருத்தால் சர்ச்சை ஏற்பட்டு அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட, அப்போது பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நீட் தேர்வுக்கு ஆதரவாக நளினி சிதம்பரம் வாதாடினாரா ? இல்லையா? என எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினை நோக்கி கேள்வியெழுப்பினார். அதன்பின்னர் நளினி சிதம்பரம் குறித்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் சபாநாயகர் இருக்கை முன்பு கூடி முழக்கமிட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வெளியேற்றப்பட்டனர்.
இதையடுத்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, "காங்கிரஸ், திமுக ஆட்சியில் தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. நீட் தேர்வு யாரால் கொண்டு வரப்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும். நீட் தேர்வால் 13 மாணவர்களுடைய மரணத்திற்கு திமுகவே காரணம். ரத்து செய்யப்பட்ட நீட் தேர்வை, மீண்டும் கொண்டு வந்து வரலாற்று பிழை செய்தது திமுக தான்" எனத் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து நீட் தேர்வு தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் இடையே காரசார விவாதம் தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது.

மற்ற செய்திகள்
