திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சென்னையில் நடக்கும் 'சீனிவாச கல்யாணம்'.. வெளியான அறிவிப்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் சென்னை தீவுத்திடலில் சீனிவாச பெருமாள் திருக்கல்யாண நிகழ்வு நடக்கவிருக்கிறது.

முன்னதாக சென்னை தியாகராய நகரில் உள்ள சீனிவாச பெருமாள் கோயிலின் உள்ளூர் ஆலோசனை குழு துணை தலைவர்களாக அமைச்சர் துரைமுருகனின் மகனும், வேலூர் எம்.பி.யுமான கதிர் ஆனந்த் உட்பட 3 பேரையும், உறுப்பினர்களாக 21 பேரையும் நியமித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்திருந்தது.
இந்நிலையில், அனைவரும் பதவியேற்கும் நிகழ்ச்சி இக்கோயிலில் கடந்த மாதம் நடந்தது. அதில் தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களுக்கான ஆலோசனை குழு தலைவர் ஏ.ஜெ.சேகர் ரெட்டி தலைமை தாங்கினார். திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பா ரெட்டி பங்கேற்று, முதன்மைச் செயல் அலுவலர் டாக்டர் கே.எஸ் ஜவகர் ரெட்டி ஐஏஎஸ், கூடுதல் முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி தர்ம ரெட்டி ஆகியோர் அனைத்து உறுப்பினர்களுக்கும் ஆணைகளை வழங்கி பதவிப் பிரமாணம் செய்து வைத்தனர்.
மேலும் அந்த நிகழ்வின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில், சென்னை தியாகராய நகர் ஜி.என்.செட்டி சாலையில் கட்டப்படும் பத்மாவதி தாயார் கோயிலுக்கு அக்டோபரில் கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளதாகவும், சென்னை ராயப்பேட்டையில் உள்ள காலி இடத்தில் கோயில், திருமண மண்டபம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
தவிர, புதுச்சேரியில் சீனிவாச பெருமாள் கோயில் கட்ட புதுச்சேரி அரசிடம் மாற்று இடம் வழங்கவும், திட்டங்களுக்கு அனுமதி பெற மாநகராட்சியிடம் அனுமதி பெறவும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து, வரும் 2022 ஏப்ரல் மாதத்தில் சீனிவாசப்பெருமாள் திருக்கல்யாணம் சென்னை தீவுத்திடலில் நடத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் "சீனிவாச திருக்கல்யாணம்" ஏப்ரல் 16ஆம் தேதி இரவு 7 மணி அளவில் சென்னை தீவுத்திடலில் நடக்கவிருக்கும் அறிவிப்பும் சுபமங்கள அழைப்பிதழும் வெளியாகியுள்ளது.

மற்ற செய்திகள்
