பைக் ரேஸில் கைதான இளைஞர்.. மருத்துவமனையில் ஒரு மாதம் வார்டு பாய் வேலை பார்க்க உத்தரவிட்ட நீதிமன்றம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் பைக் ரேஸில் ஈடுபட்டு கைதான இளைஞர் ஒருவருக்கு வினோத நிபந்தனையுடன் கூடிய ஜாமினை வழங்கியிருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.
பைக் ரேஸ்
சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்தவர் பிரவீன். 21 வயதான இவர் கடந்த 20 ஆம் தேதி சென்னையில் பைக் ரேஸில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக காவல் துறைக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து வண்ணாரப்பேட்டை போக்குவரத்து புலனாய்வு காவல்துறை அதிகாரிகள் பைக் ரேசில் ஈடுபட்ட பிரவீன் உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்தனர். இந்நிலையில் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் பிரவீன் விண்ணப்பித்திருந்தார். அவரது கோரிக்கை நிதிமன்றத்தால் மறுக்கப்படவே, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு பிரவீன் மனுதாக்கல் செய்திருந்தார்.
ஜாமீன்
இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெய்சங்கர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் கருத்து தெரிவித்த நீதிபதி ஜெய்சங்கர் "சாலையில் செல்லும் மக்களுக்கு அச்சம் ஏற்படுத்தும் வகையில் இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபடுகிறார்கள். பின்னால் அமர்ந்திருப்பவர்கள் சாலைகளில் பொருட்களைக்கொண்டு உரசி தீப்பொறியை உண்டாக்குகின்றனர். இது வேதனையை அளிக்கிறது. பைக் ரேஸில் ஈடுபட்ட பிரவீன் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள்ள விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் 30 நாட்களுக்கு வார்டு பாய்களுக்கு உதவியாளராக பணியாற்ற வேண்டும்" என உத்தரவிட்டு ஜாமீன் வழங்கினார்.
அறிக்கை
மேலும் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை வார்டு பாய்களுக்கு உதவியாளராக இருக்க வேண்டும் எனவும் ஒரு மாத பணி குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் நீதிபதி வெளியிட்ட தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
பைக் ரேசில் ஈடுபட்ட இளைஞரை அரசு மருத்துவமனையில் பணியாற்றும் வார்டு பாய்களுக்கு ஒரு மாதம் உதவியாளராக பணிபுரிய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பது தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.