'அப்பா...! உன்ன ராஜா மாதிரி வச்சுப்பேன்...' 'ஆட்டை காப்பாத்த...' 'ஆற்றில் குதித்த இளைஞர்...' 'திடிர்னு வந்த சுழல்...' - கண்ணீரில் மிதக்கும் குடும்பம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தஞ்சாவூர் மாவட்டம் பொட்டுவாச்சாவடி கிராமத்தில் வசிப்பவர் 22 வயதான வீரமணி. தனியார் கல்லூரியில் பி.இ இறுதியாண்டு படிக்கும் இவர் ஒரு நாள் தன் தந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஆடு மேய்க்கச் சென்றுள்ளார்.

அப்போது ஆட்டுமந்தையில் இருந்த சில ஆடுகள் தடம் மாறி கால்வாய் அருகே சென்றுள்ளது. அப்போது ஒரு ஆடு தவறி கல்லணைக் கால்வாய் ஆற்றுக்குள் விழுந்துள்ளது.
நீச்சல் தெரியாத நிலையிலும் வீரமணி ஆட்டை மீட்க ஆற்றுக்குள் குதித்து ஆட்டைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ஆனால் ஆற்றில் ஏற்பட்ட சுழலில் சிக்கிய வீரமணியும் ஆடும் ஒரு சேர நீருக்குள் மூழ்கினர்.
இதுகுறித்து கூறிய வீரமணியின் அக்கா, 'எங்க குடும்பத்தோட எதிர்காலமே அவன் தான். எங்கள இப்படி தவிக்கவிட்டு போய்ட்டான், எங்க குடும்பத்தோட நம்பிக்கையே அவன்தான். அவன் படிச்சி நல்ல நிலைமைக்கு குடும்பத்தை கொண்டு வரணும்னு சொல்லிட்டே இருப்பான்' என கண்ணீர் மல்கி கூறியுள்ளார்.
மேலும் வீரமணியின் தந்தை மாரியப்பன் கூறும்போது, 'எனக்கு மூணு பொண்ணு, பேர் சொல்ல ஒரு பையன் இருந்தான், ஆனா இப்ப அவனும் இல்ல. என் மனைவி என்னவிட்டு பிரியும் போதே எனக்கு பாதி உசுரு போயிருச்சு. இப்ப இவனும் போய்ட்டான். என் பையன் வீரமணி சின்ன வயசிலிருந்தே நல்லா படிப்பான். நான் கஷ்டப்படுறத பாத்துட்டு, `அப்பா நான் படிச்சு முடிக்கிற வரைதான் உனக்கு கஷ்டம். அதன் பிறகு நீ ராஜா மாதிரி இருப்பன்னு' என அடிக்கடி சொல்லிட்டு இருப்பான். எங்களுக்கு சொந்தமான 200 குழி விவசாய நிலத்தை அடமானம் வைத்து படிக்க வைத்தேன். ஆனா இப்ப எங்க வாழ்க்கையே கேள்விக்குறியா ஆகிருச்சு' என கனத்த மனதோடு கூறியுள்ளார்.
வீரமணி இறந்த சம்பவம் அவரின் குடும்பத்தை மட்டுமல்லாமல் அப்பகுதி மக்களையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மற்ற செய்திகள்
