'ஆடு, பப்பாளி பழத்துக்கு கொரோனா பாசிட்டிவ்...' 'டெஸ்ட் கருவிக்கே டெஸ்ட் வச்ச அதிபர்...' அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி...!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Issac | May 07, 2020 08:47 AM

கொரோனா சோதனைக்கருவிகளை பரிசோதிக்க பப்பாளி மற்றும் ஆடுகளின் மாதிரிகளுக்கு மனிதர்கள் பெயர் சூட்டி ஆய்வுக்கு அனுப்பியதில் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட சம்பவம் தான்சானியாவில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Corona has been confirmed for goat and papaya fruit samples

கிழக்கு ஆபிரிக்காவின் தான்சானியாவில் தற்போது கொரோனா தொற்று பரவி வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி 480 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், 17 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மக்களுக்கு ஏற்படும் தொற்றை பரிசோதிக்க சோதனை கருவிகள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது.

இருப்பினுள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கருவிகளை முழுவதுமாக நம்பாத தான்சானியா அதிபர், கொரோனா பரிசோதனைக் கருவிகளின் உண்மைத் தன்மையை ஆராயுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருந்தார். இதன் காரணமாக, அதிகாரிகள் பப்பாளி மற்றும் ஆடு போன்றவற்றின் மாதிரிகளை, மனிதர்களின் பெயர் மற்றும் வயதை இணைத்து கொரோனா பரிசோதனைக்காக அனுப்பியுள்ளனர்.

பரிசோதனையின் முடிவில் பப்பாளிக்கும், ஆட்டிற்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த தகவல் அறிந்த தான்சானியா அதிபர் மகுபலி, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கொரோனா பரிசோதனைக் கருவிகள் 'தொழில்நுட்ப கோளாறு' கொண்டவை என அறிவித்தார்.

மேலும் வெளிநாடுகளில் இருந்து நமக்கு கிடைக்கும் உதவிகள் நம்முடைய முழு நலனுக்காக இருக்கும் என எதிர்பாக்கவோ, ஏற்றுக்கொள்ளவோ முடியாது என்று தெரிவித்ததோடு, இந்த பரிசோதனைக் கருவிகள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். மேலும், பப்பாளி மற்றும் ஆட்டிற்கு சோதனை நடத்திய ஆய்வகத்தின் தலைவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் தான்சானியா அதிகாரிகளையும், மக்களையும் கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.