'அவங்க' கஷ்டப்படக்கூடாது... 12 வயசுல 'மொத்த' குடும்பத்தையும்... ஒத்த ஆளா தூக்கி சுமக்கும் 'தஞ்சை' சிறுவன்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பல தினக்கூலி தொழிலாளர்கள் வருமானமில்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த 12 வயது சிறுவன் ஒருவன் வருமானமில்லாமல் அவதிப்படும் தனது குடும்பத்தை காப்பாற்ற தினமும் பத்து கிலோமீட்டர் வரை தனது சைக்கிளில் சென்று வடை, சமோசா வியாபாரம் செய்து வருகிறார். தஞ்சாவூர் மாவட்டம் உப்பரிகை என்னும் பகுதியை சேர்ந்தவர் வரதராஜன். நரம்பு தளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்டு வந்த வரதராஜனால் சில ஆண்டுகளாகவே வேலைக்கு செல்ல முடியவில்லை.
இதனையடுத்து அவரது மனைவி சுமதி வீட்டில் இருந்தபடியே நூற்கண்டு தயாரிக்கும் வேலை செய்து வந்துள்ளார். அதில் கிடைக்கும் சொற்ப வருமானம் கொண்டு குடும்பத்தை வழிநடத்தி வந்த நிலையில் ஊரடங்கின் காரணமாக அந்த வேலையும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த தம்பதியருக்கு ஒரு மகள் மற்றும் இரண்டு மகன்கள் இருந்த நிலையில், ஆறாம் வகுப்பு படிக்கும் மூத்த மகனான விஷ்ணு என்பவர் தான் வேலைக்கு போய் குடும்பத்தை காப்பாற்றுவதாக கூறியுள்ளார்.
அதன் பின்னர், சுமதி தினமும் வடை, போண்டா ஆகியவற்றை சுட்டுக் கொடுக்க சைக்கிளில் தெரு தெருவாக சென்று விற்பனை செய்து வருகிறார் விஷ்ணு. தினமும் சுமார் 100 ரூபாய் வரை வருமானம் வரும் நிலையில், அதனைக் கொண்டு குடும்பத்தை கடந்த ஒரு மாதமாக சமாளித்து வருகிறார் சுமதி.
இதுகுறித்து விஷ்ணு கூறுகையில், 'ஊரடங்கின் காரணமாக அம்மா கலங்கி நின்றதைக் கண்டு என்னால் முடிந்த உதவியை எனது குடும்பத்திற்கு செய்ய வேண்டுமென நினைத்தேன். காலையில் சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்பினால் மதியம் தாண்டி தான் வீட்டிற்கு வருவேன். சில நாட்கள் அனைத்து பலகாரமும் தீர்ந்து விடும். சில நாட்கள் மீதி வரும். வடை, சமோசா என்று கத்திக் கொண்டு செல்லும் போது தொண்டை வலி எடுக்கும். அதே போல அதிக தூரம் சைக்கிள் மிதிக்கையில் காலும் வலியெடுக்கும். ஆனால் வீட்டில் அனைவரும் பட்டினி கிடப்பதை நினைத்து பார்த்தால் வேகமாக விற்று தீர்க்க நினைப்பேன்' என்கிறார் விஷ்ணு.

மற்ற செய்திகள்
