இனிமேலும் 'நல்ல' காலம் தான்... கொரோனாவுக்கு மத்தியிலயும் 'தஞ்சைக்கு' அடிச்ச ராஜயோகம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | May 13, 2020 03:51 AM

உலகம் முழுவதும் கொரோனாவால் முடங்கிக்கிடக்கும் இந்த சூழ்நிலையிலும் ஆங்காங்கே சில நல்ல விஷயங்கள் நடைபெற்றுக்கொண்டு தான் உள்ளன. அந்த வகையில் தஞ்சை மண்ணின் பாரம்பரியமான நெட்டி மாலைக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.

Thanjavur Netti Works got Geographical Indication Tag

குறிப்பிட்ட ஓரிடத்தில் தயாரிக்கக் கூடிய பொருட்கள் மற்றும் அதன் பெருமையை விளக்கும் விதமாக அந்த பொருளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது. இதுவரை தமிழகத்தில் தஞ்சை கலைத்தட்டுகள், நாச்சியார்கோவில் குத்துவிளக்கு, கோவில்பட்டி கடலை மிட்டாய், கொடைக்கானல் பூண்டு உள்ளிட்ட ஏராளமான பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.

அந்த வகையில் தஞ்சாவூர் நெட்டி வேலைப்பாடு, பெரம்பலூர் அரும்பாவூர் மர வேலைப்பாடு ஆகிய இரண்டு பொருட்களுக்கு புவிசார் குறியீடு அந்தஸ்து தற்போது கிடைத்துள்ளது.

தஞ்சாவூர் நெட்டி

தஞ்சாவூர் நெட்டி என்பது தண்ணீரில் விளையும் ஒரு வித செடி வகையைச் சேர்ந்தது. தஞ்சாவூர் மாவட்டங்களில் உள்ள குளம், ஏரி போன்றவற்றில் விளைகிறது. இதனுடைய நடுபாகம் தாமரை தண்டு போன்று நீளமாகவும், மேல்பகுதி சிறு சிறு கிளைகளாகவும் இருக்கும். இந்த நெட்டி டிசம்பர் முதல் பிப்ரவரி மாதங்கள் வரை கிடைக்கும். இந்த நெட்டியைப் பறித்து வெயிலில் உலர்த்தி, பதப்படுத்தி அதில் கைவினைப்பொருட்கள், பரிசுப் பொருட்கள் செய்யப்படும்.

இதனோடு வேறு எந்தப் பொருட்களையும் சேர்க்காமல் நெட்டியை மட்டுமே கொண்டு செய்யப்படுவதும், எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அதன் வண்ணம் தன்மை மாறாமல் இருப்பதும் இதன் சிறப்பாகும். முற்றிலும் கைகளாலேயே செய்யப்படும் இந்த கைவினைப் பொருட்களுக்கு எந்தவித இயந்திர உதவியும் தேவையில்லை. தஞ்சாவூரில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட பாரம்பரியம் கொண்ட இந்த கைவினைக் கலைத்தொழில் அதன் தன்மையும், தனிச்சிறப்பும் மாறாமல் தஞ்சாவூர், கும்பகோணம் பகுதியில் சுமார் 150 பேர் இதனைச் செய்து வருகின்றனர்.

அரும்பாவூர் மரச்சிற்பம்

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா அரும்பாவூர் என்ற கிராமத்தில் தயாரிக்கப்படும் மரச்சிற்பம் உலகப் புகழ் பெற்றது. இந்த மரச்சிற்பத்துக்கு 250 வருடங்களுக்கு முன்பே பழமையான வரலாற்றுச் சிறப்பு உள்ளது. அனைத்து விதமான இறை உருவங்கள், கொடிமரம், வெள்ளெருக்கில் செய்யப்படும் விநாயகர், ராமர் பாதம் ஆகியவை மிகவும் பிரசித்தி பெற்றவை. தமிழகத்தில் இதுவரை 35 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.