தீவிரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர்.. முதல்வர் வெளியிட்ட உருக்கமான இரங்கல் பதிவு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்த வீரரின் குடும்பத்தினருக்கு 20 லட்சம் நிதியுதவியை அறிவித்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
சோகம்
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ராஜௌரி மாவட்டத்தில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் இந்திய ராணுவ முகாம் அமைந்துள்ளது. இன்று காலை பயங்கரவாதிகள் இந்த முகாமை தாக்கிய நிலையில் இந்திய ராணுவ வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் லட்சுமணன் மற்றும் பேதார் ராஜேந்திர பிரசாத், ரைபில் மேன் மனோஜ் குமார் ஆகிய 3 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். மேலும், இந்த தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காயமடைந்த இந்திய ராணுவ வீரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
தமிழக வீரர்
தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த மூன்று பேரில் ஒருவரான லட்சுமணன் தமிழகத்தை சேர்ந்தவர் ஆவார். இவர் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள டி.புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். தாக்குதலில் லட்சுமணன் உயிரிழந்த நிலையில் அவரது சொந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. இந்நிலையில், நாளை லட்சுமணனின் உடல் சொந்த ஊருக்கு கொண்டுவரப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
முதல்வர் இரங்கல்
இந்நிலையில், தீவிரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த லட்சுமணனின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி அறிவித்திருக்கிறார். இதுகுறித்து தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இராணுவ வீரர் ஒருவர் உட்பட மூன்று இந்திய இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த துயரமும், வேதனையும் அடைந்தேன். தாய்நாட்டைக் காக்கும் அரிய பணியில் தன் இன்னுயிரைத் தியாகம் செய்து, வீரமரணமெய்திய இராணுவ வீரர்களுக்கு என் அஞ்சலியையும், வீரவணக்கத்தையும் சமர்ப்பிக்கின்றேன். வீரமரணமெய்திய தமிழ்நாட்டைச் சேர்ந்த இராணுவ வீரர் லட்சுமணனின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு அவர்களுக்கு 20 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.