"வாம்மா கோவிலுக்கு போலாம்"..பெத்த அம்மாவை ஏமாற்றி அழைத்து வந்து பஸ் ஸ்டாண்டுல விட்டுட்டு ஓடிய மகன்.. கண்ணீரில் தாய்
முகப்பு > செய்திகள் > தமிழகம்பெற்ற அம்மாவை கிருஷ்ணகிரி பேருந்து நிலையத்தில் தவிக்க விட்டு சென்றிருக்கிறார் மகன் ஒருவர். இந்த சம்பவம் பலரையும் கலங்க வைத்து உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த திருவள்ளுவாயில் பகுதியை சேர்ந்தவர் காமாட்சி. இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் 3 மகள்கள் உள்ளனர். இவர்கள் 5 பேருக்கும் திருமணம் ஆகிவிட்ட நிலையில் இளைய மகன் ஆறுமுகம் என்பவரது வீட்டில் வசித்து வந்திருக்கிறார் காமாட்சி.
கோவில்
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் தனது அம்மாவை கோவிலுக்கு கிளம்பும்படி கூறி இருக்கிறார் ஆறுமுகம். இதனை நம்பிய காமாட்சி கோவிலுக்கு செல்வதற்காக தனது உடைகளை ஒரு பையில் போட்டு எடுத்துக்கொண்டு தனது மகனுடன் கிளம்பியிருக்கிறார். பேருந்தில் பயணித்த இருவரும் கிருஷ்ணகிரி புது பேருந்து நிலையத்திற்கு சென்றிருக்கிறார்கள். அப்போது, காமாட்சியை ஒரு இடத்தில் உட்கார வைத்துவிட்டு ஆறுமுகம் அங்கிருந்து சென்றுவிட்டார்.
விட்டுச் சென்ற மகன் வருவான் என்ற நம்பிக்கையில் காத்திருந்த காமாட்சிக்கு பல நேரம் ஆகியும் அவர் திரும்பாததால் என்ன செய்வதென்று தெரியாமல் கதறி அழ ஆரம்பித்தார்.
நடுத்தெருவுக்கு வந்துட்டேன்
கிருஷ்ணகிரி பேருந்து நிலையத்தில் தவித்த காமாட்சி,"5 புள்ள பெத்த வயிறுய்யா.. இப்படி கடைசில நடுத் தெருவுக்கு வந்துட்டேனே" என கதறி அழுத சம்பவம் அங்கு இருந்த மக்களை கண் கலங்க வைத்தது. இதனை அடுத்து பயணிகள் சிலர் அவரிடத்தில் என்ன நடந்தது என விசாரிக்க காமாட்சி தன்னுடைய நிலைமையை விவரித்திருக்கிறார். இதனை அடுத்து காமாட்சிக்கு உணவு பொருட்கள் வாங்கிக் கொடுத்த அங்கிருந்த மக்கள் 'நாங்கள் இருக்கிறோம்' என ஆறுதல் கூறினர். அதன் பின்னர் அந்த மக்கள், மூதாட்டி காமாட்சியை கிருஷ்ணகிரியில் உள்ள அரசு காப்பகம் ஒன்றில் சேர்த்து உள்ளனர்.
கோவிலுக்கு போகலாம் என்று சொல்லி, பெற்ற தாயை அழைத்துக்கொண்டு வந்து பேருந்து நிலையத்தில் மகனே விட்டுச் சென்ற சம்பவம் பலரையும் அதிர்ச்சியடைய வைத்து உள்ளது.