"இந்த 2 மாவட்டங்கள்ல மிக கனமழை பெய்யலாம்".. வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட எச்சரிக்கை..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் 2 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும் 6 மாவட்டங்களில் கனமழையும் பெய்யலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது.

தென்மேற்கு பருவழமை
ஜூன் முதல் செப்டம்பர் ஆகிய மாதங்களில் வட மற்றும் மத்திய இந்தியாவில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும். இதனை ஈடுகட்ட இந்திய பெருங்கடல் பகுதியில் இருந்து காற்றுவீசும். அப்போது, நீர்த்துளிகளை கொண்டுள்ள காற்று மலைகளின் மீது மோதி குளிர்வடைந்து மழையாகப் பெய்யும். கேரளா, மேற்குத் தொடர்ச்சி மலைகளை ஒட்டியுள்ள பகுதிகள், கொங்கன் கடற்கரை ஆகிய இடங்களில் இந்த பருவகாலத்தில் அதிக மழைப்பொழிவு பதிவாகிறது. இந்நிலையில், தமிழகத்திலும் தென்மேற்கு பருவமழையின் தாக்கம் தற்போது அதிகரித்திருக்கிறது.
மிக கனமழை
இந்நிலையில், தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக நீலகிரி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்யலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கியது முதலே இந்த இரண்டு மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டத்திற்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் முகாம் அமைத்து தங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. நீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
கனமழை
அதேபோல, தமிழகத்தின் தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய ஆறு மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
குமரிக் கடல், மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோர பகுதிகள் மற்றும் லட்சத் தீவு ஆகிய பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் இப்பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

மற்ற செய்திகள்
