"எங்களுக்கு பரிசுத்தொகை வேண்டாம்".. ஜெயிச்ச அப்பறம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வெளியிட்ட அறிவிப்பு.. நெகிழ்ந்துபோன இலங்கை மக்கள்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇலங்கை உடனான தொடரில் வெற்றிபெற்றதன் மூலமாக கிடைத்த பரிசுத்தொகையை UNICEFஅமைப்பிடம் வழங்கியுள்ளது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி. இதனால் இலங்கை ரசிகர்கள் நெகிழ்ந்து போயிருக்கின்றனர்.
கிரிக்கெட் தொடர்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வந்தது. T20 தொடரை 2-1 என்ற கணக்கிலும், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை சமனும் செய்திருக்கிறது ஆஸ்திரேலியா. கடைசியாக 2016 ஆம் ஆண்டு இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது ஆஸ்திரேலியா. சுமார் 6 ஆண்டுகால இடைவெளிக்கு பிறகு தற்போது நடைபெற்ற தொடரில் ஆஸ்திரேலியாவின் ஆதிக்கமே அதிகம் இருந்தது.
பரிசுத்தொகை வேண்டாம்
இந்நிலையில், இலங்கை உடனான தொடரின் வெற்றியின் மூலம் கிடைத்த 45,000 டாலர் பரிசுத்தொகையை UNICEF ஆஸ்திரேலியா அமைப்பிடம் வழங்கியுள்ளது ஆஸி அணி. கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த தொகையை வழங்குவதாக ஆஸி. அணியினர் அறிவித்திருக்கின்றனர். இது இலங்கை மக்களை நெகிழ செய்திருக்கிறது.
இதுகுறித்து பேசிய ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த பேட் கம்மின்ஸ்,"இலங்கையில் என்ன நடக்கிறது என்பதை அணியினர் பார்த்தபோது, எங்களின் பரிசுத் தொகையை UNICEFக்கு வழங்குவது எளிதான முடிவாகவே இருந்தது" என்றார். இதனிடையே கிரிக்கெட் ரசிகர்கள் ஆஸி அணியின் இந்த செயலுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
Our Aussie men have donated their prize money from the recent tour of Sri Lanka to support children and families impacted by the nation's worst economic crisis in decades 💛 pic.twitter.com/XO3LaSGu7D
— Cricket Australia (@CricketAus) August 11, 2022
இலங்கை
22 மில்லியன் மக்கள் தொகை கொண்ட இலங்கை, கடந்த 70 வருடங்களில் இல்லாத அளவிற்கு பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதனையடுத்து அரசுக்கு எதிராக மக்கள் தொடர்ந்து போராடி வந்தனர். இலங்கை முழுவதும் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் பல கிலோ மீட்டர் நீளத்திற்கு மக்கள் கையில் கேன்களுடன் வரிசையில் நின்று வருகின்றனர். நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்துவிட்டதால் வெளிநாடுகளில் இருந்து பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கூட இறக்குமதி செய்ய முடியாமல் திணறி வருகிறது இலங்கை.
இதன் காரணமாக, உள்நாட்டு தொழிற்சாலைகள் பெருமளவில் மூடப்பட்டுவிட்டன. மின்சார உற்பத்தி இல்லாததால் மொத்த நாட்டிலும் ஒரு நாளைக்கு சில மணி நேரங்களே மின்சாரம் கிடைத்துவருவது குறிப்பிடத்தக்கது.