‘இரக்கமே இல்லாம வெளுத்து வாங்கும் வெயில்’!.. சென்னை வானிலை மையம் சொன்ன ‘குளு குளு’ தகவல்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை நிலவி வருவதால், கோடை வெயிலின் தாக்கம் நாளுக்குள் நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் குமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, தென் மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகிறது.
வாட்டி வதைக்கும் கோடை வெயிலுக்கு மத்தியில், நேற்று முன்தினம் பல இடங்களில் பரவலாக மழை பெய்ததால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நேற்று காலை நிலவரப்படி, மாநிலத்தில் அதிகபட்சமாக பெரியகுளம் மற்றும் தேனியில், 5 செ.மீ மழை பெய்துள்ளது. பூதப்பாண்டி, 4 செ.மீ., கயத்தாறு, நாகர்கோவில், சாத்தான்குளம், மதுரை விமான நிலையம் 3 செ.மீ., பெருஞ்சாணி, கன்னிமார், வாலிநோக்கம், பாம்பன், ஆர்.எஸ்.மங்களம், 2 செ.மீ., முதுகுளத்துார், சிவலோகம், குழித்துறை 1 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘மேற்கு தொடர்ச்சிமலையை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில், ஓரிரு இடங்களில், இன்று லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யலாம். தென் மாவட்டங்களில் நாளை மிதமான மழை பெய்யும்.
மேற்கு தொடர்ச்சிமலையை ஒட்டிய மாவட்டங்களில் 14, 15-ம் தேதிகளில், ஒரு சில இடங்களில் மிதமான மழையும், நீலகிரி, தேனி, கோவை மற்றும் திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் கனமழையும் பெய்யும். சென்னையில் அதிகபட்சமாக 35 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகும்’ என கூறப்பட்டுள்ளது.