என்ன மனசுய்யா.. தான் படிச்ச காலேஜ்க்கு 100 கோடி கொடுத்த முன்னாள் மாணவர்.!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇண்டிகோ நிறுவனத்தின் இணை நிறுவனர் ராகேஷ் கங்வால் தான் படித்த கல்லூரிக்கு 100 கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளது பலரையும் ஆச்சர்யப்பட வைத்து உள்ளது.
ராகேஷ் கங்வால்
இந்தியாவின் கொல்கத்தாவில் பிறந்த ராகேஷ் 1975 ஆம் ஆண்டு கான்பூர் ஐஐடியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டம் பெற்றார். அதனைத் தொடர்ந்து அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள வார்டன் ஸ்கூல் ஆஃப் யுனிவர்சிட்டியில் மேலாண்மை படிப்பை முடித்தார். அதன் பிறகு புகழ்பெற்ற யு எஸ் ஏர்வேஸ், ஏர் பிரான்ஸ் ஆகிய நிறுவனங்களில் முக்கிய பொறுப்பை வகித்த ராகேஷ் தற்போது இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனராக உள்ளார். இண்டிகோ நிறுவனத்தின் 37 சதவீத பங்குகளை ராகேஷ் வைத்திருக்கிறார்.
ஐஐடி கான்பூர்
இந்திய அளவில் தொழில்நுட்ப கல்வி நிலையங்களில் முக்கியமானதாக கருதப்படும் ஐஐடி கான்பூர் வளாகத்திற்கு 100 கோடி ரூபாய் நன்கொடை அளித்து இருக்கிறார் ராகேஷ். அங்கு இயங்கிவரும் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவினை மேம்படுத்த இந்த பிரம்மாண்ட தொகையை ராகேஷ் வழங்கியுள்ளார்.
இதுகுறித்து பேசிய ஐஐடி கான்பூர் வளாகத்தின் இயக்குனர் அபய் கரண்டிகர்," இது ஒரு அசாதரண நிகழ்வு. இண்டிகோ ஏர்லைன்ஸின் இணை நிறுவனர் திரு ராகேஷ் கங்வால், ஐஐடி கான்பூரில் உள்ள மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவை ஆதரிக்கும் நோக்கில் 100 கோடி ரூபாய் வழங்கியுள்ளார். அவரது இந்த தனிப்பட்ட நன்கொடை மிகவும் பாராட்டுக்குரியது" என குறிப்பிட்டுள்ளார்.
ஐஐடி-கான்பூர் கடந்த ஆண்டு மருத்துவ ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பப் பிரிவினை திறப்பதாக அறிவித்தது. அதில் மருத்துவ பள்ளியும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி கற்பித்தல் மருத்துவமனையும் அடங்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
சுமார் 1 மில்லியன் சதுர அடியில் கட்டப்பட்டுவரும் இந்த மெடிக்கல் காலேஜ்-ன் கட்டுமான பணிகள் 3 - 5 வருடங்களில் முடிவடையும் என எதிரார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஐஐடி கான்பூர் வளாகத்தில் கட்டப்பட்டுவரும் மருத்துவ அறிவியல் பிரிவிற்கு ராகேஷ் 100 கோடி ரூபாய் நன்கொடை அளித்திருப்பது பலரையும் நெகிழ வைத்திருக்கிறது.