21 வயதில் திருநங்கையாக மாறிய ஆண்… வீட்டுக்கு அழைத்து வந்து மஞ்சள் நீராட்டு விழா செய்த குடும்பத்தினர்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருநங்கையாக மாறிய தங்கள் மகனை வீட்டுக்கு அழைத்து வந்து அவருக்கு மஞ்சள் நீராட்டு விழா நடத்தி ஏற்றுக்கொண்டுள்ளனர் விருத்தாசலத்தைச் சேர்ந்த பெற்றோர்.
திருநங்கைகள் மற்றும் திரு நம்பிகள் என அழைக்கப்படும் மூன்றாம் பாலினத்தவரை இப்போது சமூகம் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றுக்கொள்ள ஆரம்பித்துள்ளது. அவர்களுக்கான கல்வி சலுகைகள், வேலைகளில் இட ஒதுக்கீடு, சுய தொழில்களுக்கான முன்னெடுப்புகள் என இப்போது சமூகம் முன்னேறி சென்று கொண்டுள்ளது.
மாற்றுப்பாலினத்தவரின் நிலை:
ஆனாலும் இன்னமும் தங்கள் பாலினத்தை மாற்றிக் கொண்டவர்களை அவரின் குடும்பத்தார் தங்களோடு வைத்துக் கொள்வதில்லை. அதனால் திருநங்கைகள் தனித்த ஒரு குழுவாக இணைந்து வாழ்ந்து வருகின்றனர். புதிதாக ஒரு மூன்றாம் பாலினத்தவரை அந்த குழுவில் இருக்கும் மூத்தவர் ஒரு குழந்தையாக தத்தெடுத்துக் கொள்வார். இவ்வாறு திருநங்கைகள் சமூகத்தில் இருந்து விலக்கியே வைக்கப்பட்டு இருக்கும் சோகம் இன்னமும் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் இவ்வாறு திருநங்கையாக மாறிய ஒருவரை அவரின் குடும்பத்தினர் ஏற்றுக்கொண்டுள்ள நிகழ்ச்சி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
விட்டுக்கொடுக்காத பெற்றோர்:
கடலூர் மாவட்டம்.விருத்தாசலம் பகுதியில் உள்ள இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த கொளஞ்சி- அமுதா தம்பதியினரின் மகன் நிஷாந்த். இவர் டிப்ளமோ கேட்டரிங் படிப்பை முடித்துள்ளார். சிறு வயதில் இருந்தே அவருக்கு ஹார்மோன் பிரச்சனைகளால் ஆண் தன்மையை விட பெண் தன்மையே அதிகமானக் காணப்பட்டுள்ளது. இதையடுத்து தனது 21 ஆவது வயதில் பாலியல் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டு நிஷா என்று தன் பெயரை மாற்றிக்கொண்டுள்ளார். அதன் பின்னர் அவர் திருநங்கைகளோடு சேர்ந்து வாழ்ந்துவந்த நிலையில் அவரை வீட்டுக்கு அழைத்துவந்த பெற்றோர் அவருக்கு மஞ்சள் நீராட்டு விழாவும் நடத்தியுள்ளனர்.
மஞ்சள் நீராட்டு விழா:
அந்த நிகழ்வையும் சிறப்பாக உறவினர்கள் மற்றும் பள்ளி நண்பர்கள் அனைவரையும் அழைத்து சீரும் சிறப்புமாக செய்துள்ளனர். இந்த நிகழ்வானது இனிமேற்கொண்டு மாற்றுப் பாலினத்தவர்களை குடும்பத்தினர் ஒதுக்குவது போன்ற சோகமான நிகழ்வுகள் இனிமேல் நடக்காமல் இருக்க ஒரு தொடக்க புள்ளியாக இருக்கும் என்று நம்புவோம். அதே போல நிஷாவை மீண்டும் தங்கள் குழந்தையாக ஏற்றுக்கொண்ட அந்த பெற்றோரின் அன்பை போற்றுவோம்.