பெண்கள் தான் டார்கெட்.. சொகுசு வாழ்க்கை.. என்கவுன்டர் செய்யப்பட்ட நீராவி முருகன் யார்?
முகப்பு > செய்திகள் > தமிழகம்திண்டுக்கல் காவல்துறை அதிகாரிகளால் என்கவுன்டர் செய்யப்பட்ட நீராவி முருகன் குறித்து பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
நீராவி முருகன்
தூத்துக்குடி மாவட்டம், புதியம்பத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன். சலவை தொழிலில் ஈடுபட்டு வந்த முருகன் நீராவி வைப்பவர் என்பதால் அவரை 'நீராவி முருகன்' என அழைத்துள்ளனர் அந்தப் பகுதி மக்கள். ஆரம்பம் முதலே, சிறிய சிறிய குற்றங்களில் ஈடுபட்டு வந்ததாகச் சொல்லப்படும் நீராவி முருகன் மீது தூத்துக்குடி மற்றும் நெல்லையில் பல திருட்டு வழக்குகள் இருப்பதாக கூறுகின்றனர் காவல்துறையினர்.
செயின் பறிப்பு
கடந்த 2014-ம் ஆண்டு சென்னை துரைப்பாக்கம் பகுதியில் நடுரோட்டில் ஆசிரியை ஒருவரை கத்தி முனையில் செயின் பறிப்பில் முருகன் ஈடுபட்டிருக்கிறார். இந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அந்த சமயத்தில் பரபரப்பை ஏற்படுத்தின. இதுகுறித்து விசாரணையில் இறங்கிய காவல்துறை அதிகாரிகள் முருகனை பிடித்து நீதிபதி முன்னர் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஆனால் அதன் பிறகு சிறையில் இருந்து விடுதலையான நீராவி முருகன் தொடர்ந்து வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதனிடையே கொலை முயற்சியிலும் இவர் இறங்கியதாக தெரிகிறது. முருகன் மீது 3 கொலை வழக்குகள் மற்றும் முப்பதுக்கும் மேற்பட்ட பிற வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இதனையடுத்து ஈரோடு மாவட்ட போலீசார் முருகனை பிடிக்க திட்டமிட்டனர். அதனால், அங்கிருந்து முருகன் தப்பி இருக்கிறார்.
150 பவுன் கொள்ளை
கடந்தமாதம் ஒட்டன்சத்திரத்தில் டாக்டர் சக்திவேல் என்பவரது வீட்டில் 150 பவுன் தங்க நகைகள் மற்றும் கார் களவு போயிருக்கிறது. இந்த கொள்ளை சம்பவத்தை செய்தது நீராவி முருகன் தான் என கண்டறிந்த காவல்துறை அதிகாரிகள் முருகனை தீவிரமாக தேடி வந்தனர்.
என்கவுன்டர்
இந்த தேடுதல் வேட்டையின் போது களக்காட்டில் பதுங்கியிருந்த நீராவி முருகனை காவல்துறை சுற்றிவளைத்து இருக்கிறது. அப்போது நீராவி முருகன் தாக்குதல் நடத்தியதால் தற்காப்பிற்காக நீராவி முருகனை சுட்டதாகவும் அதனால் அவர் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
பொதுவாகவே விலை உயர்ந்த ஆடைகள், ஷூக்கள் அணியும் வழக்கம் கொண்டவர் நீராவி முருகன். சென்னை, சேலம், ஈரோடு மற்றும் நாமக்கல் என பல்வேறு பகுதிகளில் பல பெண்களுடன் நெருக்கமாக இருந்ததாக சொல்லப்படும் நீராவி முருகன் பெண்களை குறி வைத்தே வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.
சொகுசு வாழ்க்கை
நகை, பணம், விலை உயர்ந்த ஆடைகள் என சொகுசு வாழ்க்கை வாழ்ந்த நீராவி முருகன் என்கவுண்டர் செய்யப்பட்டதையடுத்து அவருடைய உடலை வாங்கவும் அவரது உறவினர்கள் யாரும் முன்வரவில்லை. முருகனின் பெற்றோர் ஏற்கனவே இறந்து விட்டனர். அவரது மூத்த சகோதரர் ஒருவரும் இரண்டு வருடங்களுக்கு முன்பு கொரோனாவால் மரணம் அடைந்திருக்கிறார். இந்நிலையில் ஒட்டப்பிடாரம் அருகே வசித்து வந்த முருகனின் அக்கா மாரியம்மாள் என்பவருக்கு காவல்துறை தகவல் தெரிவித்திருக்கிறது. ஆனால் தங்களிடம் பொருளாதார வசதி இல்லாததால் உடலை அடக்கம் செய்ய இயலாது என அவரும் மறுத்துவிட்டதாக தெரிகிறது. இறுதியில் காவல்துறையின் வற்புறுத்தலின் பேரில் மாரியம்மாள் மற்றும் அவர் கணவர் மருத்துவமனைக்கு வந்தனர்.
கார், பணம், நகைகள், விலை உயர்ந்த ஆடைகள் மற்றும் பெண்கள் என சொகுசு வாழ்க்கையை வாழ்ந்து வந்த முருகனின் உடலை கூட அவரது உறவினர்கள் பார்க்க வராதது குறித்து தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.