"இவர் ஒரு VILLAGE விஞ்ஞானி பாஸ்".. தண்ணி'ல முக்குனாலும் ஷாக் அடிக்காத சுவிட்ச்.. வெளிநாட்டு ஆளுங்களுக்கே TOUGH கொடுக்கும் நம்மூரு எலக்ட்ரீஷியன்
முகப்பு > செய்திகள் > தமிழகம்கடந்த பல ஆண்டுகளாக எலக்ட்ரீஷியனாக இருந்து வரும் நபர் ஒருவர் புதிதாக கண்டுபிடித்துள்ளது தொடர்பான செய்தி, தற்போது பலரையும் சபாஷ் போட வைத்துள்ளது.
பொதுவாக, மழைக் காலங்களிலோ அல்லது நீர்க் கசிவு ஏற்படும் காலகட்டத்திலோ மின்சார கசிவு ஏற்பட்டு உயிரிழப்பு வரை ஏற்படும் அபாயமும் உள்ளது.
இதனால், ஈரக் கைகள் கொண்டு சுவிட்ச் போர்டுகளை பயன்படுத்தக் கூடாது என்றும் பலரும் அறிவுறுத்துவார்கள்.
அப்படி இருக்கையில், தண்ணீருக்குள் இயங்கும் சுவிட்ச் போர்டு ஒன்றை எலக்ட்ரீஷியன் ஒருவர் கண்டுபிடித்துள்ளார். சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதியை அடுத்த கண்ணார் தெரு என்னும் இடத்தை சேர்ந்தவர் சதாசிவம் (வயது 65). ஒன்பதாம் வகுப்பு வரை படித்துள்ள சதாசிவம், கடந்த 40 ஆண்டுகளாக எலக்ட்ரீஷியனாக வேலை பார்த்து வருகிறார்.
இவர் அவ்வப்போது மக்களுக்கு பயன்படும் வகையில் புதிய சாதனங்களை வடிவமைத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அந்த வகையில், மழைக்காலங்கள் அல்லது நீர்க்கசிவு காரணமாக சிலரது உயிருக்கு ஆபத்து ஏற்படுவதை பொருட்டாக கொண்டு தண்ணீருக்குள்ளேயே இயங்கும் சுவிட்ச் போர்டு ஒன்றை வடிவமைத்துள்ளார் சதாசிவம்.
அது மட்டுமில்லாமல், பிளக் பாயிண்ட்டில் இரும்பு கம்பி போன்ற மின் கடத்தும் பொருட்களை பொறுத்தினாலும் கூட மின்சாரம் தாக்காத வகையில் மற்றொரு சுவிட்ச் போர்டு ஒன்றையும் சதாசிவம் வடிவமைத்துள்ளார். இது தவிர, மொபைல் சார்ஜருக்கென்று பிரத்யேகமாக ஒரு சுவிட்ச் போர்டு ஒன்றையும் அவர் வடிவமைத்துள்ளார். இதில் குறைந்த அளவே மின்சாரம் வரும் என்பதால் குழந்தைகள் தொட்டால் கூட ஒன்றும் ஆகாது என தகவல்கள் தெரிவிக்கின்றது.
இது பற்றி பேசும் சதாசிவம், "நான் வடிவமைத்துள்ள சுவிட்ச் போர்டை பயன்படுத்தினால் மின் கசிவுக்கு வாய்ப்பே இல்லை. இதனால் உயிரிழப்புகளை முற்றிலும் தவிர்க்க முடியும். இந்த சுவிட்ச் போர்டுகளால் மின் செலவும் குறையும்" என கூறி உள்ளார்.
தண்ணீரிலேயே எந்தவித ஆபத்தும் நேராத வகையில், சுவிட்ச் போர்டு ஒன்றை எலக்ட்ரீஷியன் ஒருவர் கண்டுபிடித்துள்ள செய்தி, பலரையும் வியந்து பார்க்க வைத்துள்ளது.